Thursday 14 November 2013

முப்பு அகம் -- 9

    
          



                 முப்பு (அகம்)
முன்னுரை :-
பாரம் பாரிய சித்த மருத்துவத்தில் இதுவரை சித்தர்கள் என்றால் யார், என்பது பற்றியும் அவர்களின் மிகப் பெரிதாக கருதப்படும் இராசமணி, கற்பம், முப்பு என்பதில் ஒவ்வொன்றிலும் புறக்கருத்து அகக்கருத்து என்று பிரித்து சொல்லிவருகிறேன். இந்த முப்புவிலும் புறக்கருத்தை படித்து வந்தீர்கள். இனி நாம் அகத்தில் முப்பு பற்றி சித்தர்கள் சொல்லியுள்ளது பற்றி அறியலாம்.
          திருவள்ளுவ நாயனாரின் பஞ்சரத்தினம் – 500, என்னும் நூலின் 58- பக்கம் 316- ம் பாடலில் இருந்து இதை தொடங்குகிறேன்.
அட்டாங்கயோகம் அதுபலித்திட அருளும்முத்தி
தொட்டங்கு நின்றுதுணையாய் இயம நியம ஆசனம்
பட்டாங்கில் உள்ளபடி யறிந்து பாலிக்கதார்க்கு
முட்டாங்கு முப்பு முடியாது மொழிந்தேனிது சத்தியமே
        இந்த ஒருபாடலில் முப்பு முடிக்கவேண்டும் என்றால் அட்டாங்க யோகம் பயிலவேண்டும். அதன் மூலம் நமது அருள்நிலைவைராக்கியம் கொண்டு அதற்கு துணையாய் அட்டாங்க யோகத்தின் மிகப்பெரிய அடிப்படை செயல்களான இயம, நியம, ஆசனம் அவசியமானது இது வலுப்படமல் இதன் உள்கருத்தை அறிந்து கொள்ளாமல் எவரும் முப்பு செய்ய முடியாது என்று சொல்கிறார். அட்டாங்க யோகம் என்றால் என்ன? இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டுவித பயிற்சிகளைப் பற்றியதாகும். இதிலும் இயம, நியம, ஆதனம் என்ற மூன்றும் ஒழுக்க நெறியினையும் வைராக்கிய சிந்தனை கொண்டு நிலையாக இருக்க தெரியாதவர்களுக்கு முப்பு முடியாது என்பது பற்றி ஆணித்தரமாக சொல்லிவிட்டார். இனி அகத்தியர் வல்லாதி – 600 என்னும் நூலில் – 105 பக்கம் - 671 – பாடலைப் பார்ப்போம்.
ஒப்பேது உண்ணைவிட்டால் வேறொன்றில்லை
உத்தமனே ஊர்தொரும் அலைய வேண்டாம்
அப்பேது சாரநீர் அப்பேயாகும் அதைச்சித்தர்
சொன்னாக் கால்குருவாகாது தப்பேது காலை
விட்டாற் தப்பிப்போகும் ஒப்பேது உனக்குள்
மூன்றுமுப்புக் கூட்டினாற் சகலசித்துங் கூடுந்தானே
இதில் சாரநீர் என்பது தான் அப்பாக்கும். காலை – காற்றை விட்டால் தப்பிப்போகும் நம் உடலுக்குள் மூன்று உப்புக் கூட்டினால் சகலசித்தும் ஆடலாம். என்று தெளிவாக சொல்கிறார். இனி அடுத்த 675 – எண் பாடலில் சொல்லுவதைப் பார்ப்போம்.
வசனமென்ன என்குருவே தஞ்சமென்று
மலரடியைத்தான் பிடித்து வணங்க்கினான்பார்
வசனமென்ன எண்சானுடம்புக்கு கெல்லாம்
மைந்தனே சிரசல்லோ பிரதான மென்பார்
வசனமென்ன நீயுண்ட அன்னசாரம்
ஆகியது அளவாக வான்மேற்சென்று
வசனமென்ன புகையூறல் உப்புமாச்சு
மகத்தான ரவிமதியால் பூநீராச்சு
       இந்த பாடலில் என்ன சொல்கிறார். நமது எட்டுசான் உடலுக்கு எது முதன்மையானது தலைதான் அதில் உள்ள மூளைதான் சகல முடிவுகளையும் எடுத்து இந்த உடலை வழி நடத்திச் செல்வது. அதனால் தான் சாதரணமாக மக்கள் சொல்லும் இந்த சொல்லாடலை சொல்லி இவ்வாறு சொல்லுகிறார். தலை இல்லாவிட்டால் இது முண்டம் செத்தபினம் இயக்கமற்றதாகிவிடும். ஆகவேதான் முதன்மையானது என்று சொல்கிறார். அடுத்து நாம் உண்ட உணவின் சத்தானது அளவாக வான் மேற் சென்று புகையரல் உப்பாச்சு என்று சொல்கிறார். இந்த இடத்தில் வான் என்று சொல்வது நம் தலையானதைக் குறிப்பிடுகிறார். நம் உடலில் நாம் உண்ட உணாவானது இந்திய மருத்துவ கருத்துப்படி உடலில் 7 விதத் தாதுக்களாகக் மாறுகிறது இதில் முக்கியமானது உதிரம் எனப்படும் இரத்தம் இது வானமாகிய மூளைக்கு செல்கிறது. இதை புகையூரல் உப்பு என்று சொல்கிறார்  இதுதான் பொதுவாக நெருப்பில் இருந்து விடுபடும் புகையானது எங்கு செல்கிறது மேல் நோக்கி விண்வெளியை அடைகிறது அதனால் இரத்தம் மூளைக்கு செல்வதை வான் மேற் சென்று புகை யூரல் உப்பாச்சு உவமானமாக சொல்கிறார். மற்றும் மகத்தான இரவி மதியால் பூநீரச்சு என்று சொல்கிறார். இரவி என்றால் கதிரவனை சூரியனைக் குறிப்பிடும்.இதை நம் உடலில் சுவாசம் வலது மூக்கில் சென்று வரும் போது சூரிய கலை என்பர் மதி என்றால் சந்திரன், நிலா என்பர் இது இடது மூக்கில் காற்றானது சென்று வரும் போது சந்திர கலை எனக்குறிப்பிடுவர். இந்த மூச்சுக்காற்று பயிற்சியின்போது.இது பூநீர் என்று சொல்லப்படுகிறது. இந்த விபரங்கள் எல்லாம் நாம் சித்தர்களின் கடவுள் நிலையில் பார்க்கலாம் இவ்விடத்தில் இந்த விளக்கம் போது மானது. இனி மேற்படி நூல் -106-பக்கம் 676 – பாடலில் பார்ப்போம்.
ஆச்சப்பா சமாதியினாற் கல்லுப்பாச்சு
ஆதி யென்றவுப்பச்சு இந்துப்பச்சு
நீச்சப்பா பாழிடத்திற் பிறந்தமுப்பு
நீஅறிந்தால் காயசித்தும் வாதமாச்சு
போச்சப்ப கலியுடனே நமனோவெல்லாம்
பொல்லாத சண்டாளர் நிகழ்தம்பேசி
ஏச்சப்பா பணம்பறித் தோடிப்போவார்
என்மகனே தெளிவாக இயம்பினேனே
       இப்பாடலில் மிகத் தெளிவாக சொல்லிவிட்டேன். ஆனால் வீணர்கள் தினசரி அப்படிச் செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும், களர் நிலத்தில் பூநீர் எடுக்கவேண்டும் அது இது சேர்க்க வேண்டும் என்று பலவாராக சொல்லி பணம் பறித்தோடி போவார்கள். நீயோகநிலையில் இயம நியம நெறி தவாராது இருந்து வந்தாயானால் சமாதி நிலையில் இருக்கும் போது கல்லுப்பு என்று பெயராச்சு ஆதேயுப்பு, இந்துப்பு என்றும் பேராச்சு பாழ் இடத்தில் பிறந்த முப்புவிற்கு நீ இதை அறிந்தால் உடல் சக்தியும் வாத சக்தியும் உண்டாகும். இந்தப் பாடலில் இருந்தும் முன் பாடல்களில் இருந்தும் முப்பு என்பது வெளியில் கிடைப்பது அல்ல என்று புரிந்து இருக்கும் இன்னும் சிலகருத்துக்களை ஞானவெட்டியான் – 1500ல்  இருந்து பார்ப்போம்.
முப்பு முப்பென்று முன்னமே செப்பிய
வைப்பு இப்புவிமீ தறிவார்களோ
அப்பு முப்புவும் ஒன்றென் றுணர்வரேல்
கைப்பு முப்புக் கசடற முப்புவே
                           பாடல் -57
     முன் அகத்தியர் பாடலில் சாரா நீர் என்பது அப்பாகும் என்று சொன்னார் திருவள்ளுவனாயனார் இப்பாடலில் முப்பு என்று முன் சொன்னது எல்லாம் அப்பு தான் அதுவே முப்பு எனப்படும் இதை இந்த உலக மக்கள் உணர்ந்து கொண்டார்களானால் தெளிவாக முப்பு தெரிந்துவிடும்.
வாசியென்றும் வழலையென்றும் கெங்கையென்றும் வன்னியென்றும்
ஊசியென்றும் உதகமென்றும் உவரென்றும் பூநீரென்றும்
தேசியென்றும் காரமென்றும் செயநீரும் சாரமென்றும்
பேசிப்பேசிப் செத்தாருலகோர் பேதிக்க வகையறியதாண்டே
                           பாடல் – 73
       இந்தப்பாடலில் உலகோர் உண்மைதெரியாமல் வாசி, வழலை, கெங்கை, வன்னியென்றும், ஊசியென்றும், உதகம், உவர், தேசி, பூநீர், காரம், செயநீர், சாராம் என்று பலவிதமான பெயர்களையும் பேசிப்பேசியே காலத்தை வீனாக்கினர். உண்மையான செயலில் ஈடுபடத் தெரியாமல். என்று சொல்கிறார்.
அப்பதனை விட்டால் அட்டமா சித்தியேது
உப்பு என்று கடல் உவறினாற் கைகூடுமோ
முப்புவானது அப்புவென்று மொழிவார் உண்மையாய்ச்
செப்பினாலுமே சித்தராவரோ ஜெகதலப் புரட்டாண்டையே
இதில் கவனியுங்கள் அப்பை விட்டால் அட்டமாசித்தியேது அப்படியானால் அணிமாதி சித்திகளை அடைய அப்பு அவசியம் அதனால் அப்பா உப்பு என்று கருதிக் கொண்டு கடல் உப்பை எடுத்துக் கொண்டால் நாமக்கு அணிமாதி சித்தி கிடைக்குமா முப்பு என்பது அப்பு என்று உண்மையை சொன்னாலும் சித்தராவரோ என்றால் முடியாது இது வெல்லாம் பித்தலாட்டம். இதில் இருந்து அப்பு என்பது கடைச் சரக்குகள் அல்ல என்பதுவும் அறியலாம்.
இனி ஞானக்கும்மி பாடல் – 123 ல் இவர் சொல்வதைப் பார்ப்போம்.
முப்பு வென்று திரிவார்கள் அந்த
முப்பு வந்த வகை காணார்
அப்பூ வென்று மறந்தாக்கால்சித்தி
யாமென்று கும்மியடியுங்க்கடி
                 பாடல் – 123
காரத்தைக் கட்ட அறியார்கள் நருஞ்
சாரத்தை நீற்றினஞ் செய்யாமல்
வீரத்தைப் பூரத்தைச் சேர்த்ததனாலடி
வீனல்லவோ சொல்லு ஞானப்பெண்ணே
                 பாடல் – 124
இவர் சொல்கிறார் முப்பு என்று அலைவார்கள் அந்த முப்பு வந்த வகை தெரியமாட்டர்கள் அப்பு என்பதை நீர் என்று கருதாமல் இருந்தால் சித்தியாகும் காரத்தைக் கட்டறியாமல் ( கார,சாரம் ) சாரத்தை நீற்றினஞ் செய்யாமல் கடைகளில் விற்கும் வீரத்தையும், பூரத்தத்தையும் சேர்த்து செய்ததினால் அது வீண் செயல் என்று சொல் என்று கூறுகிறார். நீங்கள் நான் முன் அகத்தியர் வல்லதகி பாடலைக் கவனித்தால் கார,சாரம் சாரநீர் என்றது அப்பு என்பது எல்லாம் வெளியில் இருந்து கிடைக்கக் கூடியது அல்ல கடையில் வங்கக் கூடியது அல்ல என்பது விளங்கும். இன்னும் பஞ்சரத்தினம் – 500 பாடல்களைப் பார்ப்போம்
காடிவிட்டு கடைச் சரக்குகளை
நாடி விட்டுப் புடமிட நன்மையாம்
கூடிக்கெட்டுக் குடிகெடும் வாதிகள்
வாடி நட்டமிட்டு நலிவார்கள்
                      :-பாடல் – 46
      கடையில் விற்கப்படும் சரக்குகளை வாங்கி வந்து புளித்த காடியை விட்டு அறைத்து புடமிட நன்மையாகும் ஆனால் வாதிகள் என்பார் பலர் சேர்ந்து இவ்வாறு எல்லாம் செய்து தாங்களும் கெட்டு சார்ந்தோரையும் கெடுத்து நலிவார்கள். இனி இந்த முப்புவில் அண்டம்,பிண்டம் என்று முப்புவுக்கான பெயர்களில் பேசப்படுவதை பார்ப்போம்
அண்டமென்றும் அவனியிலே பலர்
அங்கும்மிங்கு மலைந்து தயங்கினார்
பிண்டமென்று முயிர்தனைக் கொன்றுதாம்
பேதையாகி நரகத்தி லாந்தினார்
துண்டமிட்டுத் துளைக்குந் தரும்பொருள்
சொல்லரிய பேரண்டமு மாகுமோ
கண்ட கண்டபடி வெளிகாண்கிலார்
கருத்தறிந்து கலப்பர்கள் ஞானியே
                 பஞ்சரத்தினம் – 22
ஆதியான என்னன்னையின் அண்டத்தில்
ஆனவைம்பத் தோரஷரத் தோடுசேர்
சோதியான சுருதி முடியாது
சொல்ல வொண்ணாத சுத்தச்சுடரொளி
சாதிமதமொடு சமயத்திற் சண்டைசெய்
தன்மையர்கட்கது தானது கிட்டுமோ
ஒதிநூல்களின் நுட்பந் தானறிவரோ
உண்மையிலண்ட முனக்குள்ளு மாகுமே
                     பஞ்சரத்தினம் -23
   இந்த இருபாடலிலும் மிகத் தெளிவாக சொல்கிறார். அண்டம் – முட்டை என்று எண்ணியும் உலகி பலர் அலைகின்றனர். பிண்டம் என்பது உடலைக் குறிப்பதால் பலவித உயிர்களையும் கொன்று துன்பத்துக் உள்ளாகினர்கள். சொல்லவே அரியதான அண்டமானது வெட்டிக் கூறு போடும் உயிர்கள் பேரண்டமாகுமோ கண்ட கண்டபடி கருத்துக்களை சொல்கின்றனர். ஆதியான எல்லாவற்றுக்கும் முதன்மையான என் அன்னையின் அன்டமாகும் இது நமுடலில் சொல்லப்படும் ஐம்பத்தோர் அட்சரத்தோடு இணைந்ததாகும். (ஐம்பத்தோர் அட்சரம் என்பது மூலாதாரம் – 4, சுவதிச்டானம் – மணிபூரகம் – அனாகாதம் – விசுத்தி – அக்ஞனை – என்னும் ஆதாரங்களின் கூட்டுத்தொகையாகும். ஆதாராம் ஞானவெட்டியான் 1500, பக்கம் – பாடல் - ) அந்த பேரோளியானது மனத்தில் சாதி பேதங்களையும், உயர்வு தாழ்வு பொன்னாசை, பொருளாசை, பெண்மாயிகை, வெறுப்பு, விருப்பு, போன்ற இயம நியம விதிகளை அறிந்து அதன்படி நடக்காதவர்களுக்கும் நூல்களினை படித்து அதன் உண்மையான கருத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கும் கிடைக்குமோ. உண்மையில் அண்டம் என்பது உனக்குள் உள்ளது. இனி சிலர் சித்தர்களின் சொல்லைத் தாவறாக புரிந்து கொண்டு பெண்களின் மாதவிடாய் நீரை எடுத்திந்த முப்பு என்பதற்குப் பயன் படுத்துகிறார்கள். அது பற்றிய நாயனாரின் கருத்துப் பார்ப்போம்.
சுக்கிலம் சுரோணிதம் மென்று சுருதிகளரைந்திடும்
கக்கிடும் எண்ணை கழட்டறியாப்பதற்க ளொன்றுகூடி
மக்கிடும் மங்கையர் ஊண்தேடி மதியழிந்து போனார்
எக்கலிட்ட நதிபோல் இவர்வாழ்வு இற்றதினாலான்டே
                        பஞ்ச – பாடல் – 66
   இனி இது போல் ஆண்களின் விந்துவும், பெண்களின் நாதமாகிய கருமுட்டையும் பற்றி எல்லாம் சித்தர்கள் சொன்ன உலக்பித்தலாட்டம் எல்லாம் வந்த வகை ஏது இந்த இரண்டு வகையானதாக சொல்லப்படும் அந்த நாதம் ஒலியிணை அறிந்தால் விந்து என்பது வேறு அல்ல என்பது புரியும். அந்த மறைப்பானது தெரியும்.
விந்துநாத மென்றுசொன்ன மேதினிபுறட்டெல்லாம்
வந்தவிதமேது இரண்டு வாரதாக வாய்க்குமே
அந்தநாதமே அறிந்தால் விந்து வேறுயில்லையே
இந்தவாதேமே மறைத்த பூட்டறியு மாண்டையே
                       பஞ்ச – பாடல் -99
விந்துவோடு நாதம்கூடி விளைந்துமே யிருக்கையில்
நொந்துமேவி வேறதாக நோக்கினால் கிடைக்குமோ
சந்திரன் கலையினால் சனித்த நாதம் விதுவாம்
அந்தகன் போல்சுற்றினால் அகப்படுவ தில்லையே
                    பஞ்ச –பாடல் – 100
இந்த இரு பாடலையும் நோக்கினால் விந்து, நாதம், என்பது என்ன என்பது புரியும். மற்றும் சித்தர் நூல்களில் அங்காங்கே பாடல்களை கூர்ந்து கவனித்தோமானால் பாடல்களில் நீங்கள் முப்பு புறத்தில் கூறப்பட்ட நாமங்கள் (பெயர்கள்) பற்றிய தற்கான விளக்கங்களும் குறிப்புகளும் சொல்லியுள்ளனர் ஆனால் மாற்றி மாற்றி சொல்லி வருவது அறியலாம். விந்துவும் + நாதம் இரண்டும் சேர்ந்தாதால் பிறந்தது இதை விட்டு வேறாக எண்ணி கொண்டால் கிடைக்குமோ. இது சுவாசப் பயிற்ச்சியின் போது சந்திரகலை (இடது மூக்கு சுவாசம்) உற்பத்தியான நாதமானாது விந்துவாகும். இதிவிடுத்து குருடன் போல் சுத்தினால் கிடைக்குமோ.
விந்துவுடன் நாதமது மேவியேநற் கெங்கையொடு 
சுந்தர காசசமாதியில் தோன்றிவரும் – அந்தவுப்பு
முப்புவென்றே யறிவார் மூதலத்திலே தெளிந்தோர்
அப்பு முப்பு மொன்றானதால்
                பஞ்ச – பாடல் – 118
     இந்த மேற்கண்ட பாடலை நோக்குவோம் விந்துவும்+ நாதம் + கெங்ககை இது மூன்றும் கலந்து அழகான சமாதி நிலையில் தோன்றும் அந்த உப்பு முப்பு என்று அறிவுள்ளோர்கள் அறிவார்கள் அப்பும் முப்பும் ஒன்றானதால். இதே கருத்தை இத்தொகுதியின் முன் அதத்தியர் வல்லாதகி நூலில் பாடல் 676 லில் சொல்லியுள்ள கருத்தையும் ஒப்பிட்டு நோக்குங்கள்.
ஆதியென்ற நாதமது அண்டத்திற் றானேது
சோதியென்று தொல்லுலகி லாரறிவார்- வாதிகள்தாம்
கடைச்சரக்கைக் தான்சுட்டுக் காய்ந்தார்க்க ளல்லால்
கடைச் சரக்கால் ஆவதுதான் இன்று
                   பஞ்ச – பாடல் – 158
   ஆதி என்றும் மூலம் ஆரம்பமாகியதுக்கு காரணமாகிய நாதம் முட்டையில் ஏது அது சோதியாகிய ஒளி என்பதை அறிபவர்கள் யார்? ஆனால் இராசவாதிகள் கடைச்சரக்குகளை சுட்டு (புறம்) போட்டு வெந்து நொந்து போவார்கள் கடைச் சரக்கினால் ஆவது இல்லை.
சொன்ன ஞானவெட்டிச் சுருதி கண்டும்
பொன்னை மேவுவரோ பெரியோர் பொய்பேசார்
இன்னுமிவ் வுலகில் எத்தனைபேர் ஞானியானார்
அன்னை குண்டலி அடிமலர் அவாவினாலே
                  பஞ்ச – பாடல் – 191
     பெரியவர்கள் பொய் பேசமாட்டார்கள் அன்னையாகிய குண்டலியின் அடிமலர் காண விரும்பும் இவர்கள் தங்கம் செய்ய அல்லது தங்கத்தை விருபுவார்களோ இது ஞானவெட்டியில் சொல்லிய முடிவு கண்டும் இவ்வுலகில் எத்தனை பேர் ஞானியானர்கள் எனவே தங்கம் செய்தார்கள் என்பது சொல்வது தவறு.
சத்தந் தன்னொடு புலனைந்தும்
சடலமிசை ஒடுங்கிச் சதானந்தமாயிருந்து
நத்தும் துறையரிய நாடோறும்
சற்சங்கமோடு ஞானநூறு கேள்வி வேண்டும்
பித்தம்கொ ண்டுதலை கிறுகிறுத்துச்
சரக்குளைப் பேதிக்கத் திரியுமூடர்க்குச்
சித்தப் பிரமைதவிர வேறில்லை
சித்தர் சொன்ன மறைப்பு தாண்டையே
                 பஞ்ச- பாடல் – 200
ஒலி என்னும் ஓசை, நாற்றம், சுவை, உணர்வு, பார்வை ஆகிய ஐம்பொரிகளின் வாயிலாகப் பெறப்படும் செயல்களை ஒடுக்கி ( எண்ணத்தை அவைகளின் வழியாகச் செல்லவிடாமல் ) எந்த நேரமும் நல்ல ஒழுக்க நெறியினைத் தழுவும் பெரியோர்களின் உறவும் நல்ல நூல்கள் படிப்பும் கொண்டு தான் செல்லும் வழிக்கு அறிய உதவியாக இருப்பவர்கள் பழக்கம் கொண்டு தன் எண்ணத்தை பேரின்ப நிலையில் இருக்கவேண்டும். இது விடுத்து தங்கம் செய்கிறேன் என்று திரியும் முட்டாள்களுக்கு பித்தம் அதிகரித்து தலை கிறுகிறுத்து திரியும் பைத்தியமே தவிர வேறில்லை இது சித்தர் சொன்ன மறைப்பாகும் இவன் பேரின்பநிலைக்கு தகுதியுள்ளவன் தான வைராக்கியம் உடையவன் தான என்பதற்கு சொல்லி வைத்த கருத்தாகும். (இல்லாவிட்டால் நித்தியானந்தாக்களும் பிரேமானந்தாக்களும் போல் இயம நியம வழிதவறியவர்கள் ஆவார்கள். சித்தர்களின் கட்டமைப்பே இயம, நியம ஒழுக்க நெறியில் இருக்க உண்மையினை தேடிச் செல்பவர்களாக இருக்க வேண்டும் பெருமுயற்ச்சி உடையவர்களாக வேண்டும் என்பதுதான்.)
கனகமென் றதனைக் கரியாக்காது
மனமது வசப்பட வழியறியவுமே
தினகரன்போல் செனிக்காம லிருக்கும்
இனமறிந்திடு மார்க்க மெடுத்திடே
                  பஞ்ச – பாடல் – 250
அட்டாங்க யோகம் அதுபலித்திட அருளும்முத்தி
தொட்டங்கு நின்று துணையா யியம நியமாசனம்
பட்டாங்கி லுள்ளபடியறிந்து பாலிக்காதார்க்கு
முட்டாகும் முப்பு முடியாது மொழிந்தேனிதுசத்தியமே
                   பஞ்ச – பாடல் – 346
இந்த இரு பாடல்களிலும் சித்தர்கள் சொல்வது ஞாயிறு போல் தினம், தினம் உதிப்பது இல்லாமல் என்ற உவமையின் மூலம் நாம் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்க சரியான வழியினை தேர்ந்து எடுத்து எட்டுவித தன்மைகளைக் கொண்ட அட்டாங்க யோகத்தினை ஒழுக்க நெறிபடி  செயல் படவேண்டும். இதனை கடைப் பிடிக்காதவர்களுக்கு முப்பு முடியாது.
ஏகவஸ்த்து என்றுமே நாம் இனியும் ஞானவெட்டியில்
பாகமாகச் செப்பிய பனுவலை மறந்துமே
நாகம்போலச் சீறியே நானிலத்தில் சுற்றினால்
ஆகுமோ நன் முப்புமுறை ஆண்டேமுடியாதே
                  பஞ்ச –பாடல் – 101
அண்டத்தில் முப்புவாய் முடித்து அறிவுடனே
பிண்டத்திற் கொண்டால் பலிக்குமே வாசியது
மண்டலத்தி லிதன்மாட்சி யறிந்த மானிடர்க்கு
எண்டிசையும் கிடுகிடுஎன்று நடுங்கு மென்னாண்டே
                  பஞ்ச – பாடல் – 97
       ஒரே பொருள் என்று ஞானவெட்டியில் பக்குவமாக சொல்லியதை மறந்து விட்டு நாகாம் போல் சீறிக்கொண்டு பலவிதமாக அர்த்தம் கொண்டு பல இடங்கள் சுற்றி வந்தால் நல்ல முப்பு ஆகுமோ ஆகாதே அண்டத்தில் முப்புவாய் முடித்து ( ஆயிரம் இதழ்களைக் கொண்ட சகஸ்ராரத் தாமரை ஆகிய பேரண்டத்தில் ) முப்புவாய் செய்து கொண்டு அறிவுடன் அதை பிண்டத்தில் உட்கொண்டால் வாசியாகியது ஒருமண்டலத்தில் இந்த மகிமை மானிடர்கள் உணர்வார்கள் எட்டுத்திசையும் நடுங்கும் அதன் வல்லாண்மை கண்டு ( பிண்டத்தில் உட்கொள்வது என்பது நீங்கள் முன் தொகுதியாகிய கற்பம் – அகம் என்பதில் படித்தும், இரசமணி – அகம் கருத்தினையும் படித்து புரிந்து கொள்ளுங்கள். 
அப்புவுடன் வன்னியும் ஆனதோர் காற்றுமே
இப்புவியில் ஏகமாய் இருந்திட – ஒப்பியதோர்
ஆதிவழலை ஆகுமே லிதறியும்
சேதி இந்த நூலினாற்  செய்
                   பஞ்ச – பாடல் – 89
      அப்புவுடன் + வன்னியும் ஆனதோர் காற்றுமே என்பது என்ன அப்புன்பது நீர், வன்னி என்பது நெருப்பு இது இரண்டும் கலந்த காற்று என்பது பிராணவாயு (ஆக்சிஜன் = ஹைட்ரஜன்) நீர் வாயு இரண்டும் கலந்த காற்றானது இந்த வளி மண்டலத்தில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். இந்த காற்றானது எல்லா இடங்களிலும் உள்ளது இதுவே ஆதி வழலை யாகுமே இது பற்றிய செய்தி இந்த நூலில் நிறைய உள்ளது என்று சொல்கிறார்.
ஊற்றுநீர் போற்பெருகும் உதகமென்னும் சுத்தசலம்
மாற்றும் வகையறிந்திந்த மாநிலத்தில் நாதவிந்தைப்
போற்றிந் தசதீஷைபத்தும் புனிதர்கள் முடிப்பர்வாசிக்
காற்றைப் பிடிக்கும் வழிகண்டவர்கள் யோகிதாமே
     இப்பொழுது இந்தப் பாடலைக் கவனியுங்கள் ஆறுகளில் ஊற்று தோண்டும்போது எப்படி நீரானது ஊறிக்கொண்டே இருக்குமோ அது போல் நம் உடலில் உதகம் என்னும் இரத்தமானது வந்து கொண்டே இருக்கும் இந்த சுத்தசலம் என்பதை மாற்றும் வகை மாற்றும் திறன் கொண்டவர்கள் நாதவிந்தை புகழ்ந்து பத்து வித தீட்சை வாசியாகிய காற்றைக் கொண்டு முடிப்பார்கள் இவர்கள் இந்த வழிகண்ட யோகியர் ஆவர். இப்பாடலில் சுத்த கெங்கை என்னும் சுத்த சலம் (நீர்) என்பது பற்றிக் சொல்லியுள்ளார். முதல் பாடலில் காற்று பற்றிக் கூறினார் இன்னும் ஒன்று உள்ளது அதையும் என்ன என்று பார்ப்போம்.
வாசிபோலவும் உன்னுள்ளே யிடைபின்கலையென
ஊசிநீரது ஒடுமேயினி உய்த்துணர்ந்திட்டு வீட்டிலே
கூசிடாமலே தினம்தினம் கொண்டு உண்டிடக்காயமே
நாசமாயழியாது நாதநீர் நாவிலுறும் சுத்தகெங்கையே
                          பஞ்ச – பாடல் – 41
    வாசிபோலவும் என்றால் காற்றானது எப்படி நம் உடலில் இடை, பிங்கலை என்று சென்றுவருகிறதோ அதுபோல் இரத்தமானது நமுடலில் சென்று வருகிறது இதை உணர்ந்துடு (வீட்டில் - உடலில்) இதை நாம் உண்டிடக் உடலானது அழியாது இந்த நாதமாகிய நீர் நாவில் ஊரும் போது சுத்த கங்கையாகும். (உடலில் இயக்கத்திற்கும் அனைத்திற்கு அடிப்படையான் பொருளாக உள்ளது இரத்தமே உடலில் விந்து வாகவும் எச்சில் சுரப்பு நீராகவும் ஏழு வித தாதுக்களாகவும் மாறக் காரணமாக உள்ளது. இந்த இரத்தத்தை நாம் பெறுவதற்கு உணவு பிரதானமானது இதுவே அன்னசாரம் எனப்படும் உணவினால் உண்டாகும் தாதுவாகும். இதை தைத்திரிய உபநிஷத்தில் விளக்கப்பட்டுள்ளது.) 
கங்குல்விடியாமே கதிபெறவும் காத்திருந்து
போங்கியதைத் தனேடுப்பார் பூதலத்தில் – தங்குமது
மாசியிலும் சித்திரையும் மண்ணு பங்குனிதனிலும்
மாசறு பூ நீரை மதித்து
                    பஞ்ச – பாடல் – 48
உவற்சாரம் என்றே ஓதிவரும் பூநீரை 
எவர்க்காயும் தோற்றாது இவ்வுலகில் – சவர்க்காரம்
கண்டாரே கண்டார் கலிவிலக வண்ணாரே
அண்டாருக்கு ஆகாதது
     இந்த இரு பாடலில் சொல்லியுல்லத்தை பார்ப்போம் விடியாத ( சூரிய உதயம் ) நேரத்தில் எழுந்து சென்று பூநீர் பூப்பதுக்கு காத்திருந்து பூநீர் பொங்கி வருவதை எடுத்து வருவார்கள். இது மாசியிலும்,பங்குனி சித்திரையிலும் மிகப் பெருமையுடன் எடுத்து வருவார்கள். ஆனால் இது உவர்மண்ணில் இருந்து வரும் சாரம் இது வண்ணார்கள் துணி வெளுப்பதர்க்கு பயன்படுத்தும் சோப்பு (சவுக்காரம்) என்று யாரும் உணர்வது இல்லை இது அவர்களின் வேலைக்கு உதவுமே ஒழிய யோகியாருக்கு ஆகாதது.
     இனி இவரது சொல்லுக்கு வலுச் சேர்க்க பிரமுனி கருக்கிடை சூத்திரம் 380 - பக்கம்  4 – பாடல் - 6 ல் சொல்லி உள்ளதை பார்ப்போம்.
தோனப்பா தத்துவ நூலாயிந்துபாரு
சொல்லும் உடம்பி எழுபத்தீராயிரம் நரம்பு
ஊணப்பா நரம்பெல்லாம் நாடியோடும்
உத்தமனே உயிர்நிலையை ஊன்றிப்பாரு
தேனென்ற வால்மீகர் நாடி சூத்திரம்
தெளிவாக எழுபத்திரண்டும் பாரே
          இப்பாடலின் மூலம் நம் உடலில் 72 ஆயிரம் நாடி நரம்புகளில் ஊண் நீராகிய இரத்தம் ஓடுகிறது என்பதையும் இதனால் உயிர் நிலைப்படுவதையும் ஊன்றிக் கவனி இந்த வீரத்தினை வால்மீகர் எழுதிய நூல் தனைப்பார்த்து அறிந்து கொள்.
செய்வதற்கு வாதத்தின் கருவைக்கேளு
செப்பாதே துரிசியத்தில் விந்துநாதம்
செய்வதென்ன பூமியுட நாதமொன்று
சிறப்பான பிரமகற்பம் கல்லுச்சுண்ணம்
பைவதென்ன பாறையாங் கல்லுப்பொன்று
பாங்கான அண்டமொன்று பிண்டமொன்று
தைவதென்ன பஞ்சபூத மஞ்சுமாச்சு
தனக்குள் பயன் அறிந்தால் குருவுமாச்சு
உய்வதென்ன பயனென்ன காராசாரம்
உரையாமல் சித்தரெல்லாம் ஒழித்திட்டரே
    மேற்கண்ட பிரமமுனியின் பாடலைக் கவனிப்போம் வாதத்திற்கான கருவைச் சொல்கிறேன். துரிசியத்தில் விந்து நாதம் இதில் துரிசு என்பது துரியவெளியைக் குறிக்கிறது அட்டாங்க யோகத்தில் துரியம் துரியாதீதம் என்ப்படுவதில் துரியனிலையாகும். பூமியுட நாதம் ஒன்று, பிரமகற்பக் கல்லுச்சுன்னம் ஒன்று, பாறையாம் கல்லுப்பு ஒன்று, அணடம் ஓன்று, பிண்டம் ஒன்று, ஆக இது ஐந்தும் சேர்ந்தால் பஞ்சபூதம் ஐந்தும் சேர்ந்த இந்த உடலாகும் இந்த நம் உடலுக்குள் இந்த பஞ்சபூதம் ஐந்தின் தொழில் என்ன என்பதை அறிந்தால் அது குருவாகும் இதன் பயன் காரசாரம் ஆனால் இந்த காரசாரம் பற்றி சித்தர் ஒழித்து விட்டனர்.
ஒழித்திட்டே பலபலவாய்ச் சொன்னாரே
உட்பொருளை அறியாமல் அலைந்தார்வாதி
அருந்திட்டு அண்ட பிண்டம் ஆதியந்தம்
ஆகாசம் அடிமுடியும் துரியாதீதம்
அழித்திட்டுச்சாகாது வேகாதெல்லாம்
அடங்கிநின்ற பொருளென்ன விந்து நாதம்
தெளிந்திட்ட மனோன்மனித்தாய் பூரணமேயாகும்
சிவசிவா துரியவெளி அட்சரமுமாமே
     சித்தர்கள் காரசாரம் பற்றி பலபல விதமாகச் சொன்னார்கள் இதனால் வாதிகள் இதன் உட்பொருளை அறியாமால் அலைந்தனர். அண்ட, பிண்டம், ஆதியந்தம், ஆகாசம் அடிமுடியும் என்பது எல்லாம் துரியாதீதத்தினை குறிப்பதாகும். சாகாது, வேகாது என்ற உபமான பெயர்களின் பொருள் விந்துநாதம் என்பதாகும். இதில் பூரணம் என்று சொல்லப்படுவது மனோன்மனித்தாய் என்பதுவும் ஒன்றுதான். அட்சரம் என்பது துரிய வெளியைக் குறிப்பதாகும்.
அட்சரத்தை அறிந்தார்கள் சித்தரெல்லாம்
அறியாமல் உலகத்தோர் அலைந்துகெட்டார்
நிட்சயமாய் இந்நூலை நிலைக்கச்சொன்னேன்
நிலைதரும் பூரணத்தை நிலைத்துப்பாரு
அட்சரமாம் நிலைதங்கி அறிவிற்கூடி 
அடங்கிநின்ற பொருளெல்லாம் மவுனமாச்சு
அட்சரமாம் சொல்வதற்கு ஆராலாகும்
அறிவுகுரு அல்லாது ஆசானுண்டோ
நிச்சயமாய் ஆதிதன்னை மூலத்தூனில்
நிலைத்திட்டால் சுழிமுனைதான் நிசமாக்கானே
அட்சரம் என்பது எது என்று சித்தர்கள் அறிவார்கள் ஆனால் உலோகோர் தெறியாமல் அலைந்து கெட்டனர் நமக்கு அறிவுதான் குருவாகும் அறிவைவிட்டால் வேறு குரு இல்லை. சித்தர்கள் எதையும் சிந்தித்து முடிவு எடுக்கும் சித்தாந்த வாதிகளாவர். ஆகவேதான் அறிவை முன் நிலைப்படுத்தி சொல்கின்றனர். அட்சரம் எனப்படும் இடத்தில் மனத்தை நினைவை நிலையாக செலுத்தி அறிவு கொண்டு சிந்தித்தோமானால் அடங்கி நின்ற பொருளெல்லாம் என்ன மவுனம் தான் யோகநிலையில் மனத்தை ஒரே நிலையாக உள் நோக்கி செலுத்தவேண்டும். மூலத்தில் அவ்வாறு நிலைத்திட்டால் சுழி முனை காணும்.
போடவே வழலை யென்றசுண்ணமாச்சு
புத்திகெட்ட வாதிகளே சித்தர்சொல்லார்
ஆடவே நாதாக்கள் ஆட்டமெல்லாந்தான்
அம்மம்மா வழலைவிட்டால் வேறுயுண்டோ
பேரான அண்டபிணடம் பிரமகற்பம்
வண்டென்றும் எரியென்றும் பாறையென்றும்
மதயானைக் கல்லென்றும் வீரமென்றும்
ஆடவே சொன்னதெல்லாம் விந்துநாதம்
அதையல்லால் வேறென்றும் அறியேன்பாரே
      புத்தி கெட்ட வாதிகளே முப்புச் சுண்ணம் என்று சொல்கிறிர்களே அந்தச் சுண்ணம் எது அது வழலை தான் வழலைவிட்டால் வேறுண்டோ இதை அண்டமென்றும், பிண்டமென்றும், பிரமகற்பம், வண்டென்றும், எரிஎன்றும், பாறை என்றும், மதயானைக் கல்லென்றும், வீரம் என்றும் சொன்னது எல்லாம் விந்து நாதம் இதை விட்டால் நான் வேறு அறியேன். இதில் முதலில் வழலை தவிர வேறு இல்லை என்று சொல்லிவிட்டு அண்டம், பிண்டம் என்ற பெயர்களை சொல்லிவிட்டு விந்து நாதம் தவிர வேறு இல்லை என்று சொல்கிறார். வழலை என்றாலும் விந்து நாதம் என்றாலும் ஒன்றுதான்
பாரென்ற நாதத்தில் விந்து புக்கில்
பாங்கான பிருதிவியும் அப்பும் வாய்வும்
ஆரென்ற ஐவருந்தான் சேர்ந்ததாலே
அருவுருவாய் ஐங்கோலப் பிண்டமாச்சு
சாரென்றும்  வழலையென்றும் முப்புவென்றுஞ்
சவுக்கார குருவென்று மிதற்கேபேராம்
பாரென்ற கோசபீச மிதற்கேபேராம் 
பஞ்சபூதச் சரக்கென்றும் இதற்கேபேராம்
பரண்யென்றும் இதைமறைத்துச் சித்தரெல்லாம்
பலபலவாய் நூல்தோறும பாடினாரே
பாடினாரென்நூலில் வெளியாச் சொன்னேன்
பதினெட்டுப் பேருமென்னை பகைத்திட்டார்கள்
விதியே சொன்னதொரு வழலைப்போக்கு
வெவ்வேற யென்று சொல்லி மலைக்க வேண்டாம்
     இந்தப்பாடலை சற்று கூர்ந்து நோக்கினால் நாதம் இந்த இடத்தில் கரு முட்டையை குறிக்கிறது. இந்த நாதாமாகிய கரு முட்டையில் விந்து எனப்படும் சுக்கிலத்தில் உள்ள உயிர் அணுவானது இணைந்தால் மண்,நீர், காற்று, தீ, ஆகாசம் எனப்படும் ஐந்தும் சேர்ந்த ஐங்கோலப் பிண்டம் என்று உடல் ஆகியது. இது கருப்பையில் இணைந்த காலத்தில் கண்ணுக்கு தெரியாத அருவமாக ( வெளிப்பார்வைக்கு தெரியாத நிலை) இருந்தது. பின் அது வளர்ந்த கண்ணுக்கு தெரியக் கூடிய நிலையில் உடலாக ஐந்து அடிப்படைப் பொருள்களும் சேர்ந்த பிண்டமாகியது  உயிர் அற்ற நிலையில் பிண்டம் என்று அழைக்கப் படும் ( நீங்கள் பார்பனிய திதிச் சடங்குகளில் சொல்லும்போது பிண்ட தானம் என்ற வார்த்தையைப் பயன் படுத்துவார்கள் ) இதற்கு வழலை என்றும் முப்பு என்றும் பஞ்சபூதச் சரக்கு என்று பெயர் இதை எல்லாம் பார்த்து மலைக்க வேண்டாம்.
பாடியதோர் நாத விந்தில் வழலையாகும்
பரிவான பிண்டத்தால் வழலையாகும்
ஆடியதோர் அடிமுடியும் வழலையாகும்
மத்தியொடு மாமிசமும் வழலையாகும்
ஆடியே வழலைதொட்டு வாதம்பாரு
அலையாதே கற்பத்தை உண்டுதேற
    இந்தப்பாட்டின் மூலம் எல்லாம் வழலையாகும் என்று சொல்கிறார். எனவே நீ யோகத்தில் இருந்து அந்த நிலையில் கிடைக்கும் கற்பத்தை உண்டுதேர். இந்த யோகநிலையில் கிடைக்கும் கற்பம் பற்றி எனது முந்தய தொகுதி 7 ல் கற்பம் அகத்தில் சொல்லியுள்ளேன்.
தேறவே ரசவாதஞ் சிவசொத்தப்பா
செப்ப்பதே பொருள் தனையேஇச்சிக்காதே
ஆறவே செய்தாலும் பரத்துக்கீந்து
அறிவுகுரு போதத்தில் அடங்கிநில்லு
பாருநீ பாரபரப்பாய் திரிந்தாயானால்
பலியாது அவள்தனக்கு வாதமேது
கூறார்கள் வாதமொடு ஞானம்ரெண்டும்
குருபதத்தைப் போற்றி செய்யில் அறிவிற்கூடும்
விறக என்நூலில் வெளியாய் சொன்னேன்
விண்டிடால் விண்ணிலிட விளங்க்கும்பாரே.
   இரசவாதம் என்பது சிவன் சொத்தப்பா அதனால் இதையாரிடம் சொல்லாதே பொருள் மேல் ஆசைவைக்காதே. அப்படி ஒருவேளை நீ செய்தாலும் அதை பரத்துக்கு கொடுத்துவிடு பின் நீ ஆடிப்பாடி பரபரப்பாய் திரியாமல் மொளனமாக இருந்து அறிவாகிய குரு சொல்ப்படி கெட்டு ஞான நிலையில் இரு. பெரியோர்கள் வாதத்தையும் ஞானத்தையும் இரண்டையும் சொல்லமாட்டார்கள். அவளிடத்தில் சக்தியிடத்தில் வாதமேது அதைவிடுத்து குருவைப் போற்றி அறிவுடன் செயல்பட்டு என் நூலில் நான் வெளிப்படையாக சொன்னேன் விண்டு சொன்னால் விளங்கும் பாரே. இதில் ஓரளவுக்கு புரிவது மாதிரி இருந்தாலும் சில குழப்பங்கள் இருக்கும் நாயனார் பாடல் அகத்தியர் பாடல்களையும் மீண்டும்  பாருங்கள். மீண்டு நாம் நாயனாரின் பஞ்சரத்தினம் பாடலில் சிலவற்றைப் பார்ப்போம்.
செகமாய்கையது திர்ந்திடாவிடிலே
செய்வதேது நல்யோகும்
வெகுமாய்கை மனம் யோனியாசைதனில்
வெம்பியே கீழிழுத்திடும்
சுகமாகமனம் அலையாதிருக்கச்
சொல்லினார் பதிணென் சித்தர்தாம்
அகமாய்கை தனை நீந்தினால் வரும்
ஆத்ம ஞானப் பூநீரதே
               பஞ்ச –பாடல் – 52
சந்திர புஷ்கரணி தீர்த்தமும்
சலியாத பானம் அமுரிகள்ளுதான்
சுந்திதிரமாகவும் பிண்டத்தில்
தோன்றுமே கண்டத்தானமே
              பஞ்ச – பாடல் – 59
இந்தப் பாடல்களில் உலக ஆசை நமக்கு தீராவிடில் யோகம் செய்ய இயலாது. பலரின் மனமானது பெண்ணாசையில் சென்று கீழ் நிலையை அடைந்து விடுகிறது. இதானால் தான் மனத்தை அலையாது இருக்கச் சொல்லினர் பதிணென் சித்தர்கள். நம் மனம் சுத்தமானால் வரக கூடிய ஆத்மா என்று அழைக்கப்படும் பூநீராகும். சந்திர புஷ்கரணி தீர்த்தம், சலியாத பானம், அமுரி, கள்ளு என்று எல்லாம் சொல்லப்படக் கூடியதானது நம் உடலிலேயே தோன்றக் கூடியதுதான் வேறல்ல. இவை எல்லாம் அழகாக நம் உடலின் கழுத்துப் பகுதியில்  விசுத்தி என்று அழைக்கப்படும் நிலையில் தோன்றக் கூடியது. இது பற்றி கற்பம் அகத்தில் அமுதம் வருவது பற்றிக் சொல்லியது தான்
காரம்மென்னும் பூநீரு காயமதிலும் இருக்க
சாரமதைக் கொண்டு சவுக்காரமதை கட்டரியார்
பூரம்மென்றால் காரமிது பூநீறதுவும் புளிகான்
வீரமென்ற விந்தமுரி வெளியில் வெடியுப்பறிந்தே
                      பஞ்ச – பாடல் – 931
நம் உடலிலேயே காரம் என்று சொல்லப்படும் பூநீரு இறுகும் போது இதைக் கொண்டு சவுக்காரத்தை கட்டறியாதவர்கள். பூரம் என்றாலு காரம் தான் இதுவும் பூநீர் என்றும் பழம்புளி என்றும் வீரம் என்றும் சொல்வது எல்லாம் ஒன்றுதான் இதையே அமுரி வெடியுப்பு என்றும் சொல்லப்படும்.
பிருதிவி நகாரமதாம் பிராணனும் மகாரமப்பு
இருதயத்திலும் இருந்த இந்திரியமாமுரி
அறியப்போமோ வெளிக்காண் அம்புவியில் எங்குமுண்டு
சுருதி முடிவான சுடர் சூச்சமறிந்ததே முடிப்பர்
                     பஞ்ச – பாடல் – 932
பிருதிவி (பூமி) நாகரம் எனப்படும் பிராணன் மகாரம் எனப்படும் நம் இருதயத்தில் உள்ள இரத்தமானது அமுரி எனப்படும் இவை எல்லாம் எங்கும் உண்டு இதை நாம் அறிந்து ஆக்கிஞ்ய நிலைப் பகுதியில் தோன்றும் சுடர் (ஒளி) என்பதைக் கண்டவர் முப்பு முடித்தவர்கள் ஆவர். இந்த நுட்பத்தை அறியுங்கள். இந்த இடத்தில் பிருதிவி என்பது நம் உடலைக் குறிப்பதாகும்.
வன்னியும் வாயுவு மப்புவும் வாய்த்துமே
நன்னயம் பெற நன்மையாய்க் கூடினால்
இந்நிலந் தனில் முப்பு வென்றாச்சுதே
பின்னும்றும் பிறப்பகற்றும் மிதே
இந்தப் பாடலில் முப்பு பற்றி மிகத் தெளிவாக சொல்லியுள்ளார் என்பதைக் கவனிக்கவேண்டும் வன்னி – தீ, வாயு – காற்று (பிராணன்), அப்பு – நீர் இது மூன்றும் நன்மையாய் ஒரு சேரக் கூடினால் இன் நிலம் ( நம் உடல் -பிருதிவி ) என்னும்  உடலில் இணையும் போது “ முப்பு ஆகும். அதாவது வாணத்தில் இருந்து ஒரு உப்பு காற்று ( இதில் பிராணவாயு உள்ளது ) கடலில் இருந்து ஒரு உப்பு நீர் இதுவும் நம் உடலில் இரத்தமாக உள்ளது இவை இரண்டும் சுவாசப் பயிற்சியின் போது ஏற்படும்போது உஷ்ணம் உண்டாகும் இது தீ என்னும் ஒரு உப்பாகும். இந்த மூன்று உப்பும் சேர்ந்தால் மூவுப்பு – முப்பு ஆகும். இதே கருத்து உள்ள பாடல் இதே தொகுதியில் ஆரம்பத்தில் அகத்தியர் வல்லாதி 600 என்னும் நூலில் 105 ம் பக்கம் 671 ம் பாடலில் அகத்தியரின் கருத்தையும் படித்து பார்த்தீர்களானால் உண்மை அறிவீர்கள் இனி அகத்தியர் கேசரி குரு நூல் – 54 லில் சில பாடல்களைப் பார்ப்போம்.
பதி தலத்திலீரெட்டு இதழுமொன்றாய்ப்
பதினாராய்ச் சோடசமாய் வளர்ந்துதேய்ந்து
திதிபிளந்துக் கதிர்நாளிற்பெளரனையே யானாற்
தினமறிந்து யிடகலையைக் கதிரிற்சேர
கதிமுத்திக் காய்ச்சிக்கு இதுவேதீட்ச்சை
பவுர்ணமி நாளில் இடது கலையில் பூரித்து கும்பித்து வலது கலையில் இரேசிக்க வேண்டும் இதை பதினாறு இதழ்களையுடைய தலத்தில் இருந்து செய்ய இதுவே காயசித்திக்கு தீட்சையாகும்.
கருத்தரித்து வளர்ந்து வெளியேறுங்காலங்
கருவாளி நீயானாற் கருவைபாரு
உருப்படுத்தியுன்னை வளர்த்த அருமைதனை
உற்றுப்பாரு உண்மைனதிலறிவாய் நீயும்
கருத்துள்வைத்துப் பருதி மதி கதிரிற் சேர்ந்த
கலவையரிந்து உருதிபெற்றுக் காயசித்தி
திருத்தமாய்ப் புகுந்து கண்டால் முத்தி
தேறுவது திண்ணமிது சித்தியாமே            
நீங்கள் ஒரு கருவானது உருவாக்கி அது கருவறையில் வளர்ந்து வெளிவருகிறது இதனை நாம் வாழ்வியலில் பார்க்கும் நிகழ்ச்சியாகும் ஆனால் இந்தக்கரு வளர்ச்சி யாரால்,எதனால், எப்படி உருவாகியது அதற்க்கு காரணம் யாது என்று சிந்திப்பது இல்லை நீ உண்மையான கருத்து அறியும் அறிவாளியானால் சிந்தித்துப்பார். பருதி – சூரியன் – வலது கலை எனப்படும் சுவாசம் மதி –சந்திரன் இடது கலை எனப்படும் இடது நாசியி வரும் சுவாசம் இவ்விரண்டும் ஒன்றிணைந்து அக்கினிகலை எனப்படும் சுழிமுனை நாடியாகிய நடு நாடியில் செயல்பட்டால் முத்தியடைவது உறுதி.
சித்தாதி பதினெட்டுஞ் சேருசித்தர்
சிறுத்து மதிபெருத்து வளர்பதியைக்கண்டு
அத்தர் திருனடனந்தாள் பதியைப்போற்று
ஆயிதிரோதாயினுட மாய்கை நீக்கி
முத்தர்பரிபூரணமாய்த் தாயைப் போற்றி
மூலமுதலாறுவரை யகண்டர் கண்டோர்
இத்தகைமையரிந்த சித்தர் கெல்லாம்நாமே
யோகரிஷி யானோமப்பா அறிவற்றனே
சித்தர்கள் அகமாய்கை நீக்கி மூலாதாரம் முதல் உள்ள ஆதார இடங்களைக் முறையாக கடந்து அத்தான் திரு நடனத்தை மனதில் கண்டு பரிபூரணமாகிய தாயை போற்றி வாகை கொண்டனர். இவர்களிக்கு எல்லாம் நான் என் அறிவால் அவர்களுக்கு யோகம் சொல்லும் தலைவனானேன்.
அகத்தியர் பரிபூரணம் – 400, பக்கம் – 68 – பாடல் - 377 இந்தப் பாடலுடன் நிறைவு செய்து பின் சித்தர்களின் கடவுள் நிலைப்பாட்டில் பார்ப்போம்.
போற்றினால் உனது வினையகலுமப்பா
பிறவியில்லாப் பதவியே புனிதமாவாய்
போற்றினால் பூரணமும் கூடப்பேசும்
பூதலத்தில் நீயுமொரு சித்தனாவாய்
போற்றினாலென்ன பலனில்லை என்றால்
பொதியமலை எனக்கேது புலத்தியாகேள்
போற்றினோம் பூரணத்தின் கிருபைகண்டோம்
புத்தியுடன் தானேதான் பூண்டுபாரே
தானான ஆதார சொருபந்தன்னைச்
சமர்த்தாகத் தானறிந்து தியானம்செய்து
தேரான புலத்தியனே அறிவால் தானும்
தேகத்தில் உயிர்சிவமாய்த் தெரிந்துகொண்டு
வானான கேசரியில் மனக்கண்வைத்து
மனங்கனிந்து ஒங்றீங்அங் என்றோது
கோனான ஆதார பூசைகாணும்
கோடான பூசை செய்தபலத்துக் கொப்பே
இந்த இரு பாடலையும் கவனியுங்கள் பூரணம் என்றும் பாராபரம் என்றும் பலவித பெயர்களில் அழைக்கப்படும் அனைத்துப் பொருள்களிலும் நிறைந்துள்ளதும் இந்தப் பேரண்டத்தில் பரிபூரணமாய் நிரந்தரமானதும் எதுவோ அதை வாழ்த்தினால் நம் பிறவி அகலும் நாம் புனிதனாவோம். அந்தப் நிரவுப்பொருள் நம் கூடப்பேசும். வாழ்த்தினால் பலன் இல்லை என்று எண்ணாதே புலத்தியனே இல்லாவிட்டால் எனக்கு பொதியமலையில் வாழ்வுதான் ஏது. நான் வாழ்த்தினேன் அதன் பலன் கண்டேன் நீயும் பாரு. எல்லாவற்றுக்கும் ஆதாரமான நிலைதனை அறிந்து தியானம் செய்து அறிவைக் கொண்டு சிந்தித்து நம் உடலின் இயக்கத்துக்கு காரணமான உயிர் என்று சொல்லப்படுவதுதான் சிவம் பரிபூரணம் என்று தெரிந்து கொண்டு கேசரியில் ( சகஸ்ரார தளம் ) மனத்தை செலுத்தி மனத்தை வேறு எண்ணங்களில் செலுத்தாமல் இருப்பதற்கு ஒங் றீங் அங் என்ற சொல்களை மனதில் சொல்லிக் கொண்டு இருந்தாயானால் நீறைவான நிலை அடைவாய் கோடான பூசைகள் செய்த பலன் கிடைக்கும்
நிறைவுரை :-
சித்தர்களின் முப்பு என்னும் பொருள் எது என்பது ஓரளவு விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். முப்புவின் பெருமைகளைப் பற்றி சொல்லி உள்ளவைகளை கூர்ந்து கவனித்தால் அவ்வறியபொருள் புறப்பொருளாக இருக்க முடியாது என்று நான் உணர்ந்தால் மீண்டும்மீண்டும்ஆய்வுகள் செய்ததில் இவ் முடிவே சரியான கருத்தாக தோன்றியது. இரசமணி, கற்பம் என்றும் வாகாரம் என்று சொலப்படுவது எல்லாம் இந்த அகச் செயல் பற்றியதாகும் என்பதில் மறுப்பதற்கு இல்லை. 
அப்பரிசு என்ன்பத்து நான்கு நூறாயிரம்
மெய்ப்பரிசு எய்திவிரிந்து உயிராய் நிற்கும்
அப்பரிசு எதுன்று புகலும் மனிதர்கள்
அப்பரிசே இருள்மூடி நின்றாரே
                            :- திருமந்திரம்
       நான்குவித வழிகளில் (யோனியில்) உண்டாகும் 7 வித மான நிலைகளில் உண்டாகும் 840000 லட்சம் உயிரினங்களின் பிறப்புக்கும் காரணமான அதன் இயக்கத்திற்கு உயிராய் இருப்பது எதுவோ அதை நம்பாதவர்கள் அவர்கள் அறியாமை என்னும் இருளில் இருக்கின்றனர்.                 
                       

                                                                                   

No comments: