Thursday 14 November 2013

முப்பு புறம் - 8





முப்பு (புறம்)
முன்னுரை :-
சித்த மருத்துவத்தில் முப்பு என்பது மிகப் பெரிய மருத்துவ பொருளாக கருதப்படுகிறது. இதுபற்றி நாம் சித்தர் நூல்களில் இருந்து பார்ப்பதற்கு முன் அன்றைய நாளில் சில பெரியவர்கள் அல்லது மருத்துவர்கள் முப்பு பற்றி கொண்டு இருந்த கருத்து என்ன? என்று நாம் தெரிந்து கொண்டோமானால் சரியான தீர்வுக்கு வழி வகுக்கும். இது பற்றி இரசவாத சிந்தாமணி என்னும் நூலின் ஆசிரியர் ஹக்கீம பா. அப்துல்லா சாயபு அவர்களால் 1901-ல் வெளியிடப்பட்ட மேற்கண்ட நூலின் முதற்பாகத்தின் முகவுரையில் கூறப்பட்ட கருத்துச் சுருக்கத்தை பார்ப்போம். இது படிப்பவர்களின் இன்றைய தலை முறையினருக்கும், மருத்துவர்களுக்கும் முப்பு பற்றி ஆய்வாளர் களுக்கும் உதவியாக இருக்கும். இக்கருத்துக் கொண்டே நான் இத்தொகுதியின் இரசமணி, கற்பம், போன்ற பகுதிகளில் அகம், புறம் என்று பிரித்து எழுதிவருகிறேன். இவர் பல அரிய யூனானி, சித்த நூல்களின் ஆசிரியரும், மற்றும் சுகாதார போதினி என்ற மருத்துவ இதழின் ஆசிரியரும் ஆவார். இனி அவரது முப்பு பற்றிய முகவுரைக் கருத்தைக் காண்போம்.
இரசவாத சிந்தாமணி முகவுரை :-
           இந்த அபூர்வ கிரந்தத்தை (நூல்) அச்சிட்டு வெளிப்படுத்த நான் பலவந்தப் பட்டகாரணம் இன்ன தென்னப் பின்வரும் சங்கதிகளால் எங்கும் பிரகாசிக்கும் தங்கம் போலும் உள்ளங்கை நெல்லிக்கனி போலும் சங்கையின்றிவிளங்கும்.
           இப்புவியிங்கன் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட பல்லாயிரம் ஜீவராசிகளும் மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனிலும் கூன், குருடு, செவிடு, பேடு, நீக்கி பிறத்தல் அரிது அதனிலும் சுதேசபிமானம், ஜிவகருண்யம், பரோபகாரம் முதலியவைகளை உடையோரென்னும் புகழ் படைத்தல் அரிது. இவ்விதம் மானிட ஜன்னமடையப் பெற்ற நாம்   நாளவம் போக்காது இகபர சாதனங்கள் எய்துவதற்கு இன்றியமையாத் துணைக் கருவியாயுள்ள இச்சரிரமானது பேரு, இளமை, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு என்னும் இவ்வாறுக்கும் லட்சியமாயிருக்கின்றது. இவற்றுள் மேலும் இளமை, இன்பம், பேரு என்னும் மூன்றும் அடைதற்குப் பெருந்தடையாய் உள்ளது பிணி, மூப்பு, சாக்காடு என்னும் பின் மூன்றுமேயாகும். இவ் மூன்றுன் முதன்மையாய் இருப்பது பிணி ஒன்றேயாம். அவ்வாறான பிங்கலை போக்கச் சரீர ஆரோக்கியம் அமைவதற்கு சாதனமானது ஆயுள்வேத சாரமாகிய வைத்திய நூல் ஆகும்.
          இவ்வித ஆயுர் வேத நூல் முறைப்படி எல்லா அவுடதங்களையும் செய்து முடிக்க உதவியாக உள்ள முப்புச் சுண்ணம் என்னும் ஒருவகை மருந்து பற்றிச் சற்று யோசிப்போம். முப்பு என்னும் வார்த்தையானது ஒரு சொல்லா? அல்லது பலசொற்கள் சம்பந்தத்தால் உண்டானதா? அல்லது வேறு பாஷைச் சொல்லானது மருவியிவ் சொல்லானதா? எனப் பெருத்த சந்தேகமாயிருக்கிறாது. இதைப் பற்றி பலரிடம் விசாரித்தும் ஒன்றும் பிரயோசனம் இல்லை. மூப்பு அல்லது முப்பு என்னும் சொல்லின் முறையே முதலீற்று நெடில் குறுகி முப்பு என மருவியதா? அப்படியாயின் அருத்தமென்ன?
             மூவுப்பு அல்லது மூன்று உப்பு என்பது முப்பு வென மருவி இருக்கலாம் என்பது சிலர் அபிப்பிராயம். இக்கருத்துக் இசையவே முப்பு என்பது ஜலவுப்பு வாயுப்பு அக்கினியுப்பு என்னும் மூவகை உப்பால் செய்யப்படுகிற தென்கிறார்கள். பூநீர் நவச்சாரம் வெடியுப்பு என்னும் மூன்று வகையுப்பின் சம்பந்தத்தால் செய்யப்படுவது முப்பு எனப்படுகிறது என்பது பெரும்பாலோர் அபிப்பிராயம்.
             வேறு சிலர் பூநீர் என்னும் ஒன்றிலேயே மேற்கண்ட ஜலவுப்பு வாயுப்பு அக்கினியுப்பு என்னும் மூன்று வகையுப்புகளும் இருக்கின்றன வாகையால் மேற்படி பூநீறைப் பாகப்படுத்தி அவற்றைப் பிரித்து பின்பு மூன்றையும் செய்வதே முப்பு என்கின்றனர். இவ்விதம் பலர் பலவித அபிப்பிராயங்க்களுள் எது உண்மையானது என்பது விளங்காமல் இருக்கிறது. ஆனால் மேற்கண்ட அபிப்பிராயங்கள் எல்லாம் சரியானதே. ஆனால் அக்கருத்தை விளக்கிக் கொள்வது நம்மனோருக்கு அசாத்திய மென்கிறார்கள் இது எப்படியாயினுனும் முப்பு என்பது பூநீர் சம்மந்தப்பட்ட ஒருவகைப் பிரயோகம் என்பது ஏற்படுகிறது.
           இன்னும் நாம் பின் சொல்லியிருப்பது போல பூநீர், பூநிறு என்னும் வார்த்தைகளில் எது சரியானது என விளங்கத் தேடவேண்டியதாய் இருக்கிறது. பூநீர் என்பது பூசாரம் அல்லது நிறச வஸ்த்து எனறு அருத்தமாம். பூநீர் என்பது வழலை நிலவீரம் அல்லது ஒருவகை உப்பு என அருத்தமாகிறது. இன்னும் வழலை என்பது சவுக்காரம் (சோப்பு) அல்லது வழலையுப்பு எனவும் அருத்தமாகிறது. இவ்விதமே பூநிறு அல்லது பூநீர் என்னும் ஒருவஸ்த்துவிற்கு பல வகை அபிப்பிராயங்களுண்டு முடிவாய் சொல்ல முப்பு என்பது பொதுவாய் மேற் சொன்னது போல் பூநீரில் அல்லது பூநீர் சம்மந்தமாய் செய்யப்படுகிற ஒரு வகை உப்புச் சுண்ணம். இதனை முடிக்கும் வகைகளை மூன் சொன்னது போல் ஒவ்வொரு சாஸ்திரத்திலும் ஒவ்வொரு வகையாய் சொல்லப்பட்டிருக்கிறது. அவை எல்லாவற்றையும் இங்கெழுதுவதானால் இன் நூல் இடம் தராது. ஆயினும் ஒருவாறு சுருக்கி சொல்லவேண்டியது அவசியமானதாகையால் அதற்கு ஒவ்வொரு நூல்களில் குறிப்பாய் சொல்லியிருக்கும் பற்பல பாஷைகள் அல்லது இடுகுரிகள் பின்வரும் விதமாம்..
          (௧) பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், என்றும்
          (௨) மண், நீர், நெருப்பு, காற்று, வெளி, என்றும்
          (௩) பிரமா, விஷ்ணு, ருத்திரன், மயேஸ்வரன், சதாசிவன், என்றும்
          (௪) சிருஷ்டி, திதி, சம்ஹ்காரம், திரோபவம், அனுக்கிரகம், என்றும்
          (௫) அ, இ, உ, எ, ஓ, என்றும்
          (௬) ந, ம, சி, வ, ய, என்றும்
          (௭) ஐயும, கிலியும், சவ்வும், ஸ்ரீயும், என்றும்
          (௮) கோட்டை, மதில், மலை, வச்சிரம், அண்டம் என்றும்
          (௯) கம்பியுப்பு, பாரையுப்பு, கல்லுப்பு, இந்துப்பு, வளையலுப்பு  
           என்றும்   
           இவ்விதம் பற்பல பாஷைகளாகவும் இது குறிகலாகவும் ஒவ்வொரு நூல்களிலும் இந்த முப்புவையோ அல்லது அது சம்பந்தமான பகத்தையோ முடிக்கச் சொல்லப்பட்டு இருக்கிறது. இன்னும் மேற்கண்ட ஐந்து வகைப் பிரிவுகளில் இரண்டு பழுதில்லையாம். அதற்கு உதாரணமாக மேற்கண்ட வகைகளில் அஷ்ரபாஷை அல்லது பஞ்சாசாரம், அல்லது மூலமந்திரம் என்னும் வகையை எடுத்து உதகரிப்போம் (விவரிப்போம்).
           மேற்கண்ட வகையில் பழுதில்லாத இரண்டேழுத்தாவன நகாரமும், சிகாரமுமாம். அதாவது நசியாம் இவற்றிக் இன்மானவை முறையே அகாரமெனவும் உகாரமெனவும் சொல்லுவார்கள். அகாரம் சிவமாம் உகாரம் சத்தியாம். இன்னும் அகராம், நாதமாம் உகாரம் விந்துவாம் இவ்விதமே அகாராம் அண்டமாம் உகாரம் பிண்டமாம். இப்படியே அகாரம் உயிராம். உகாராம் உடலாம் இங்கணமே அகாரம் வானமாம் உகாராம் பூமியாம். இக்காரணங்களாலேயே உடலை சத்தி என்றும் உயிரை சிவம் என்றும் சொல்கிறார்கள்.
           அ, உ, என்னும் இரண்டையும் வாணமென்றும் சொல்லுவார்கள். எப்படியெனில் நாதமும், விந்துவும் சேர்ந்தால் எவ்விதம் உருத்தரிக்கிறதோ அவ்விதமே தமிழில் எட்டு என்னும் எண் இலக்கக் குறிப்பாகிய “ அ “ வுடன் இரண்டு என்னும் குறியீடாகிய “ உ வைச் சேர்த்தால் (10) – பத்தென்னும் எண் குறிப்பாகிய “ய வாகிறது. இந்த “ ய என்னும் எண்னே யகார உயிர் மெய் எழுத்தாகிறது. இந்தவகையில் யகராமானது ந, ம, சி, வ, ய, என்னும் வகையில் ஆகாய அம்சமாயிருப்பதே காரணமாம். ( எனது கருத்து “ அ “ என்னும் குறியீடு தமிழில் எட்டு என்னும் எண் எழுத்தை குறிக்கும் சொல்லாகும். அது போல “ உ “ என்னும் குறியீடு தமிழில் இரண்டு என்னும் சொல்லைக் குறிக்கும் சொல்லாகும். அவ்வாறெனில் எட்டு என்பது எண்சாண் உடல் என்று நம் உடலைக் குறிப்பதாகும். “ உ “ என்பது தமிழில் இரண்டைக் குறிக்கும் சொல்லாகும் இந்த இரண்டு என்னும் எழுத்து தமிழில் உயிர் எழுத்து வரிசையில் வரும் எழுத்தாகும் இது நம் உடலின் இயக்கத்திற்கு காரணமான உயிரை குறிப்பதாகும். உயிரும் + உடல் இணைப்பே இயக்கமாகும். இதைக் குறியீடாக காட்டியுள்ளார்கள்.)
         பஞ்சபூதமாகிய பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்தையும் பெண்,ஆண் என இருவகையாகவும் அடக்கிச் சொல்வார்கள். அதன் விபரம் ஆகாயம், வாயு,தேயு மூன்றும் ஆனாம் பிரிதிவி, அப்பு இரண்டும் பெண்ணாம். ஆகையால் ஆண்,பெண் என்னும் அ, உ சேர்ந்து ஒ என்னும்  பிண்டம் உண்டானதாம். இவ்விதம் அ, உ, ஓ, என்னும் மூன்றும் ஒஎன்பதில் ஒன்றாய் ஓடுக்கமாயிருப்பதையே பிரணவம் என்று சொல்வதும்முண்டு. ஆகையால் தான் ஐந்தில் இரண்டு பழுதில்லை என்றும் சொல்வார்கள், பெரியோர்கள்.
           இன்னும் பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் பிரிதிவி, ஆகாயம் என்னும் இரண்டில் அடங்கி நிற்பதைத்தான் ஐந்தில் இரண்டு பழுதில்லை என்பார்கள். இதையே ஆண், பெண் என்றும் ஆகாசம், பூமி என்னும் அண்டம் பிண்டம், மென்றும் அ, உ, என்றும் சொல்கின்றார்கள். இதன் விபரத்தை அகத்தியர் ஞானகாவியத்தில் காண்க. இன்னும் பூமியானது தான் ஒன்றும் வயிற்றில் ஒன்ருமாகிய இரண்டும் ஆகாயமாகிய ஒன்றும் ஆகக் குடிய மூன்றையும் ஐந்தில் மூன்று பழுதில்லை என்றும் சொல்வார்கள்.
          இன்னும் ஐந்து பூதங்களும் ஒவ்வொன்றிலும் ஐந்து உட பூதங்கள் தனித்தனி அமைந்து இருக்கின்றன. ஆகையால் ஆகாயத்தில் பிரிதிவி, ஆகாயத்தில் அப்பு, ஆகாயத்தில் தேயு, ஆகாயத்தில் வாயு, ஆகாயத்தில் ஆகாயமாம். இவற்றுள் ஆகாயத்தினுள் அடக்கமாயிருகின்ற மேற்கண்ட ஐந்தனுடன் சூரியன், அக்கினி, சந்திரன் என்னும் மூன்றும் அதிகமாய் அடங்கியிருப்பதால் (5+3) = 8 இந்த எட்டையும் அஷ்ட சரக்கென்றும், அஷ்ட லவணம் என்றும், அஷ்ட அஷரம்(எட்டு எழுத்து) என்றும் சொல்லுவார்கள். இதன் விபரம் ந- என்பது கோட்டையாம், ம- என்பது மதிலாம், சி- என்பது மலையாம், வ- என்பது வச்சிரமாம், ய- என்பது நாதமாம், இதைப் பற்றி விஷேசமாய்த் தெரிந்து கொள்ளப் பிரியம் உள்ளவர்கள் இராமதேவர்- 300 ல் பார்வையிடவும். மேற்கண்ட விஷயங்களை எளிதில் தெரியும் படியாக இதனை அட்டவணையாக வரிசையாக எழுதுகிறேன்.
பிரிதிவி ---- அப்பு ---- தேயு ---- வாயு ---- ஆகாயம்
மண்    ---- நீர்   ---- நெருப்பு – காற்று ---- வெளி
பிரம்மா ---- விஷ்ணு – ருத்திரன் – மயேஸ்வரன் – சதாசிவம்
சிருஷ்ட்டி – திதி ------ சம்ஹ்காரம் – திரேபாவம் – அனுக்கிரகம்
ஐயும ----  கிலியும் – சவ்வும் ----- ரீயும் ----- ஸ்ரீயும்
கோட்டை – மதில் --- மலை ------ வச்சிரம் --- அண்டம்
கம்ம்பியுப்பு – பாரையுப்பு --- கல்லுப்பு – இந்துப்பு – வளையலுப்பு
அ ---------- இ ----------- உ ------- எ ---- ஓ
ந ----------- ம ----------- சி -------- வ --- ய
----------------------------------------------------------------
பெண் ......................................................... ஆண்
----------------------------------------
உ ........................................................................ அ
----------------------------------------
பூமி ......................................................... ஆகாயம்
-----------------------------------------
நானென்றும்       | இதில் மண், நீர், நெருப்பு, காற்று, வெளி, சூரியன்
வயிற்றிளொன்றும் | சந்திரன், அக்கினி என்னும் எட்டும் அடங்கி உள்ளது
                     இது “அ “ மாம்.
-------------------------------------------------------------------------
    அ – உ – ஓ – இது ஓங்க்காரபிண்டம் இதில் மூன்று ஒடுக்கம்
-------------------------------------------------------------------------
மேற்கண்ட வகைகளை இன்னும் அநேக விதமாய் அர்த்தம் செய்வார்கள். இங்கு சொல்ல வந்ததெல்லாம் சித்தர்களால் பாடப்பட்டிருக்கும் சாத்திரங்களில் கரவாக அல்லது மறைவாக அல்லது பரிபாஷையாக சன்னல் பின்னலாயிருப்பதாலும் அவற்றிற்கு, வியாக்கியானம் செய்பவர்களுக்கு இலகுவே ஒழிய சிற்றறிவுள்ள நம்மனோர்க்கு. ஆழ்ந்த கடலைக் கைகொண்டு நீந்திச்சென்று கரையேறுவது போலவாம். அந்த நூல்களின் கருத்தை அறியாமலே நாம் ஒருவழியாய் சென்று வழி தெரியாமல் மயங்கி மருண்டு முடிவில் நூல்கள் பொய்யென்று நூல்கள் தலை மேல் பழியைச் சுமத்தி விடுகிறோம். இவ்வகை சாத்திரங்களில் சுருக்கத்தைச் சாதாரணமாய், எல்லோரும் அறியக் கூடாதென்னும், கருத்தமைந்த ஒரு பாட்டும் முன்னோர்களுள் ஒருவரால் சொல்லப்பட்டிருப்பதையும் இங்கு எழுதுவோம்.
அம்மானிருந்து மாத்தாள் பிறந்தது
அம்மானுக் காத்தாளவள் பாரியானதுக்
செம்மை ரவியோடு சேர்ந்து கலந்து
நம்மாளுறை செய்ய நாமறியோமே.
என ஆன்றோர் உரைத்திருப்பதையும் காண்க. இவ்விதம் ஒன்றையே பலவுருவமாய்ச் சொல்லியிருக்கின்றனர். அப்பரிபாஷைகளில் உழன்று,சுழன்று பன்பட்டவர்களுக்கு உபயோகமாகுமே யொழிய நம்மனோர்க்கு உபயோகமாகாது என்பது யாவருக்கும் வெளியாகவும் தெளிவாகவும் புலப்படும்.
         இவ்வாறு ஹக்கீம் அப்துல்லா சாயபு அவர்கள் தனது இரசவாத சிந்தாமணி என்னும் நூலின் முதல் பாகத்தில் கூறியுள்ளார்.இதில் அவர் முப்பு பற்றியதை மட்டும் தெரிவித்து மற்றவற்றை நீக்கியுள்ளேன். இது சித்த மருத்துவத்தில் உள்ள கருத்து மாறுபாடுகள் பற்றி அறிந்து கொள்ள உதவும்.
முப்பு விபரம் அப்த்துல்லா சாயபு :-
          அப்துல்ல்லா சாயபு அவர்கள் தனது இரசவாத சிந்தாமணியில் 26– பக்கம் முதல்-126 வரை முப்பு பற்றி கூறிய விபரங்களை தருகிறேன்.
பூநீர் :- முதன்மையானது பூநீரேயாம் இந்த வார்த்தையானது பூநிரா? அல்லது பூநீறா என்பதிற் சந்தேகமுண்டு. ஏனெனில் பூநீர் என்பது பூமியின் குணம் அல்லது பூமியின் தன்மை அல்லது பூசாரம் என அர்த்தமாகிறது. ஆகையினால் பூநீரென்பதே சரியான தெனச் சிலரும் பூசாரம் என்பதே சரியான வார்த்தை எனச் சிலரும் சொல்கின்றனர். இவ்வார்த்தைகளுள் பூநீர் என்பதே பெரும்பாலோர் அபிப்பிராயம். ஆனால் இந்த உப்பை பக்குவப் படுத்தி சுண்ணம் செய்தபின் பூநீறு என்பதே சரியானதாய்க் காணப்படுகிறது. ஏனெனில் இதன் யோக முறையானது பற்பங்கள், செந்துரங்கள், லோகமாரனங்கள் முதலிய எல்லாவித விஷஎங்களுக்கும் உபயோகப்படுகிறது. இதன் யோகமுரைகள் ஒவ்வொருவரால் அவரவர் அனுபவப்படி ஒவ்வொரு விதமாக சொள்ளப்படினும் இங்கு அனுபவமான சிலமுறைகளை விபரமாய் எழுதுகிறேன்.
        பூநீர் என்பதைப் பக்குவப் படுத்தும் தீட்சை செய்தல் அல்லது சுத்தி செய்தல் என்றும் அல்லது சுத்திசெய்யப்பட்ட அந்த வஸ்த்துவுடன் (பொருள்) வேறு சில சரக்குகளைச் சேர்த்து செய்யப்பட பாகத்திற்கு கீழ்க்காணும் விதம்  அநேகநாமங்கள் உண்டு. அந்த நாமங்களையும் (பெயர்கள்) ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் சொல்கின்றனர் ஆயினும் அவற்றின் முக்கியமானவைகளை மாத்திரம் இங்கு எழுதுவோம்.
பாகப்படுத்தின பூநீரின் பெயர்கள் :-
(1)    வழலை – இது ஏகநாமம் (ஒரேபெயர்)
(2)    அண்டம் –பிண்டம் இவை துவ நாமங்கள் (இரண்டு பெயர்கள்)
(3)    இடகலை, பிங்கலை, சுழிமுனை திருநாமங்கள் (மூன்று பெயர்கள்)
(4)    அம்பு, ஏரி, பரிதி, மதி, வில் இவை பஞ்ச நாமங்கள் (ஐந்து)
(5)    அரிதாரம், இடி, இரண்ய கற்பம், இறையம், கோசம், கெளரி, தனித்தியம், பீசம், மேகம், வாயு இவை தச நாமங்கள் (பத்து)
(6)    அமுரி, உரி, உவர், உவர்மண், கடுக்காய், சிகை, சுண்ணம், தசைனஞ்சு, திரிகுனஜலம், நஞ்சு, நாதம், பாசனம், பூமிநாதம், வயிரம், விந்து, வெள்ளைக்கல், இவை சோடசநாமங்கள் (பதினாறு)
(7)    அடி, அமாவாசை, அரக்கி, ஊனுப்பு, ஐம்பத்து ஒன்று, கணபதி, கம்பி, கருநெல்லி, கிரகம், குயவன், கொள்ளி, நடு, நவமூலி, நீருப்பு, பிரதமை, பூநீர், மிதுனம், மூடி, மேடம், லவனம், வண்ணான், விஷமி, விஷம், வெடியுப்பு, வென்சாரை, இவை பஞ்சீகாரண நாமம் (இருபத்திஐந்து)
(8)    அனாமி, எழுபிறப்பு, ஐவர், ஓசை, கண்மணி, கதிர், கமலம், காமி, குடிபோம்வீடு, கூற்றன், சாரி, சிங்கி, சுடர், சுட்டால், சுயம்பு, சூடன், நாயகம், நிலப்பூடு, நீரண்ணம், பச்சை, படிகம், பண்ணை, பரமன், பிடாலவனம், புஷ்டி, பொட்டல், மடையன், மனற்பொடி, மலம், மவுனம், மாசி, முயல், லிங்கம், விஷ்ணு, வெடி, வெளி, என்னும் ணாஉஇவை 36- நாமங்கலாம். ணஉணஊ
(9)    அக்கினிக்கம்பு, அங்கி, அயம், அவுரி, இந்திரகோபம், சிரம், இராசவர்க்கம், உரம், உருளை, ஏகசவுக்காரம், ஏமம, ஒளி, கடற்பாசி, கண்டங்கத்திரி, கண்ணாடி, கந்தகம், கரடு, கரந்தை, கரும்பூனை, கருவி, களிச்சுன்னம், தணல், தணல்மேலுப்பு, கண்ணி, குண்மம், குரு, குருத்து, கொக்கு, கொள்ளி, கொடி, கொன்றை, கோதை, கோமயம், கோரோசனை, சங்கம், சங்கு, சந்நியாசிமண்டை, சமாதி, சரபீசம், சர்ப்பம், சாளக்கிராமம், சிங்கு, சுக்கான், சுத்தம், சூக்கமம், சூலம், சொறி, சோடசம், சோதி, சோமநாதம், தலைப்பிள்ளை, தாது, திருமேனி, துத்தி, துருசு, தூலம், தேர்க்கால், தொட்டி, நன்டோடு, நந்தி, நாகம், நிலவுப்பு, பஞ்சமித்திரம், படலம், பரம, பரி, பாலைநிலம், புத்தான், புரியட்டம், புனுகு, பூரம், பூரணம், பொன்னுமத்தைவித்து, மகரம், மதனப்பூண்டு, மதி, மந்திரம், மலைருது, மீன், மீனம், முட்டை, முத்தான், யானைக்கால், ரவி, வங்கு, வலியான், வள்ளி, வாசி, வியாக்கிரம், விருட்சம், வெண்கண்டர், வெண்காரம், வெள்ளையாவாரை, என்னும் இவை தொண்ணுற்றாறு நாமங்கள்.
     பாகப்படுத்தப்பட்ட இந்த பூநீருக்கு 125- மறு நாமங்கள் (பெயர்கள்) உண்டு. இவை எல்லாம் கூடிய தொகை 319-ஆகும் அதாவது  1+2+3+5+10+16+25+36+96+125=319 பெயர்கள் என்று சிலரும் இன்னும் சிலர் 1000- பெயர்கள் என்றும் கூறுகின்றனர். இந்த பூநீரை பாகப்படுத்துவது தான் முப்பு அல்லது மூப்பு எனச் சொல்லப்படுகிறது. பழைய உப்பு எனவும் அல்லது மூவகை உப்பு எனவும் முப்பூ என்பதைப் பற்றி மாந்திரிக சாஸ்திரிகள், ஞான சாஸ்திரிகளும் (படித்தவர்கள்) முதலிய ஒவ்வொருவரும்  தங்கள் தங்கள் சாஸ்திரங்கள் தான் சரியாகச் சொல்லியுள்ளார்கள் என்று பலவிதமாக சொல்கிறார்கள். ஆகையால் பலதடவை அனுபவமானவகைகளை எழுதுவோம்.
        இவ்வாறு உயர் திரு முகமது அப்துல்லாசாயபு அவர்கள் மேற்கண்ட நூலில் கூறியுள்ளார். நாம் சித்தர் நூல்களில் இருந்து பார்ப்போம். ஏன் நான் அப்துல்லா அவர்களின் கருத்தை இதில் சொல்லி பின் நாம் ஆய்வு செய்யலாம் என்பது இரசமணி, கற்பம், மூப்பு இந்த மூன்றையும் மிகமுக்கியமானதாக சித்தர் நூல்களில் சொல்லுவதாலும் அவர்கள் இதை முன்பின்னாகவும் மறை பொருளான உபமான சொல்களை சொல்லியும், ஒருவர் சொல்லியது பற்றி அடுத்தவர் நூல்களை பார்க்கும் படியும் சொல்லி செல்வதால் உண்மைப் பொருள் விளங்காது பலரும் இதுகுறித்து சரியான முடிவுக்கு வரமுடியாது உள்ளதை அன்றைய நாளில் மிகப் பெரிய மருத்துவராக கருதப்பட்டவரின் கருத்தைப் பற்றி தெரிந்து கொண்டால்தான் இதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
தன்வந்திரி சூஷும வைத்தியம் – 200 :-
தன்வந்திரி என்னும் சித்தரின் நுட்பவைத்தியம் இருநூறு என்னும் நூலின் பக்கம் –5, பாடல்-12 லில் இருந்து பார்ப்போம்.
ஆச்சென்ற யோகத்தைப் பாரானாகில்
அப்பனே வாதமொடு ஞானஞ்சித்தி
வாச்சென்ற வாதத்தா லென்ன வாகும்
வளமான ஞானத்தைப் பாரு பாரு
நாச்சென்ற ஞானத்தை யாரிந்தாரானால்
நலமான சிவயோகப் பதவி யாவார்
நீச்சிநின்ற பொருளறிந்தோன் சித்தன் சித்தன்
நிலையான மனத்தோர்க்குச் சித்தியாகும்
                            பாடல்-12
யோகம் செய்யாமல் அதன் நெறி முறைகளைக் பார்த்து அதன் வழி போகாமல் சித்தர்களின் உண்மைக கருத்தை அறிய முடியாது வாதம் (தங்கம் செய்தல்) அறிவு முதிற்ச்சி எதுவும் உண்டாகாது. தங்கத்தால் என்ன கிடைக்கும் அறிவால் சிந்தித்து பார்த்தாரானால் நலமான சிவயோகப் பதவியடைவர். சித்தர்களின் மறை பொருள் அறிந்தோன் சித்தன் சித்தன் என்று வலியுறுத்திச் சொல்கிறார்.
சித்தென்ன வூமையனை தெரிந்து சொன்னேன்
சிறப்பான வழலையுட மார்க்கங்க்கேளு
வத்தென்ன வைத்தியத்தின் வழலைகேளு
மண்பான பூமியுட நாதமப்பா
சுத்தனாயிருந்தாக்காற் சொல்வேன்பாரு
சொற்பெரிய உவருப்பைக் கொண்டுவந்து
நற்றன்ன படிஓன்று அளந்துகொண்டு
நலமான பாண்டத்திற் கொட்டிப்பாரே
                        பாடல் – 13
பாரப்பா பணிநீரைக் கொண்டுவந்து
பரிவாக இரண்டுபடி அதனில் வார்த்து
சேரப்பா கலக்கியே யடுப்பிலேற்றிச்
சிறப்பான குழம்பு போலாகும் சோதி
வாரப்பா இறக்கியதை வைத்துக்கொண்டு
வளமாக வாறிவரும் பதத்தைகேளு
சீரப்பா பீங்கான்றான் அகலமாகச்
செப்பமுடன் கொண்டுவந்ததனிலுற்றே
                      பாடல் - 14
ஊற்றியதோர் பீங்கானை இல்லத்தில்வை
உணர்வான வாலையைத்தான் லட்சமோது
வாத்தியதோர் நைவேத்தியம் துபங்க்காட்டு
வளமான பால்பழங்கள் வைத்துவைத்து
நாத்தியதோர் நாற்பதுநாட் சென்றதானல்
நலமான பூப்பூத்துக் காய்க்கும் பாரு
மாற்றிய தோரஞ்சாநா ளானபின்பு
வளமான காய் காய்த்துப் பழமாம்பாரே
                        பாடல் -15
பழமாகு நாற்பத்தியைந்துக் குள்ளே
பரிவாகப் புவெடுத்துப் பதனம்பண்ணு
வளமாகும் தூபமொடு தீபங்காட்டி
அப்பனே வைத்தியமுப் பிதுதான்பாரு
பழமாகும் முப்புவின் சுண்ணம்கேளு
நலமான கல்வத்தில் முப்புவிட்டு
கழமாகும் குக்குடத்தில் லண்டம்வாங்கி
கணமாகப் பிளந்ததிலே விந்தை வாரேன்
                          பாடல் – 16
வாரப்பா சாமமது ஒன்றுமட்டும்
வளமான பணிநீறார் சாமமாட்டு
ஆரப்பா வில்லைசெய்து நிழலுர்த்தி
யப்பனே விந்துவினா லேழுசீலை
நாரப்பா யாறவைத்துக் கோழிபுடம்போடு
நலமாகச் சுண்ணமதாய் வெண்ணீறகும்
காரப்பா சுண்ணமதை யெடுத்துக்கொண்டு
கருவாக வயிரவர்க்கும் பூசைபண்ணே
                          பாடல் - 17
பண்ணவே குப்பிதனிற் பதனம்பண்ணு
பண்பான வவுடதத்தின் கூடச்சேரு
வண்ணவே யாக்கிராணங் கலிக்கத்தோடு
வகுத்தவிந்தக் கட்டுவகை செயநீர்ப்போக்கு
மென்னவே சிந்தூரம் பற்பத்தோடு
மேவான மாத்திரைகள் எண்ணையோடும்
சுன்னவே தைலமொடு சூரணங்கள்
கனமான லேகியங்கள் கிருதந்தானே
                   பாடல் – 18
தன்வந்திரி தனது சூட்சம வைத்தியம் – 200, என்னும் நூலில் இருந்து மேற்கண்ட பாடல்களைப்பார்த்தோம். இதில் வாதம் (தங்கம்) செய்முறையால் என்னபயன் ஒன்றும் இல்லை யோகத்தை அனுசரித்து ஞானம் பார்த்துவந்தால் நிலையான மன நிலையில் சிவயோகத்தை அறிந்து சிவயோகப்பதவி அடைவர்.
   நான் ஊமையனைத் தெரிந்து சொன்னேன். சிறப்பாக சொல்லப்படும் வழலை என்ற முப்பு பற்றித் தெரிந்துகொள். வைத்தியத்திற்கானது இந்த வழலை- பூமியுனுடைய நாதமாக உள்ளது. இதற்கு உவருப்பு (களர் நிலத்தில் இருந்து எடுக்கும் உப்பு இதை வண்ணார்கள் எடுத்துவந்து துணி வெளுக்க இது கரைத்த நீரில் துணிகளை முக்கி அலசிப் பிழிந்து வெள்ளாவி அடுப்பில் வைத்து வேகவைத்து துணிகளை வெளுக்கச் செய்வார்கள். இதற்கு தற்கால இரசாயனப் பெயர் சோடியம் கார்பனேட் என்று அழைக்கப்படும்) இது களர் நிலங்களில் பூமிகாடியில் இருக்கும். சுண்ணாம்புக்கல் அல்லது ஓடைக்கல் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இக்கல்லானது மார்கழி தை,மாசி, பங்குனி மாதங்களில் இரவில் ஏற்படும் பனிப்பொழிவை ஏற்று காலையில் அடிக்கும் வெய்யிலின் உஷ்ணத்தால் பக்குவப்பட்டிருக்கும் இதனால் இரவு நேரங்களில் இராசயணக் காரனங்காளால் பொங்கி நிற்கும் இது நிலா வெளிச்சத்தில் பளபளத்துக் காணப்படும். இதுவே பூநீர் எனப்படும் இதனைச் சித்த மருத்துவர்கள், வாதிகள் மேற்கண்ட நிலத்தில் இரவில் போய் இருந்து எடுத்து வருவார்கள்.( பகலில் சூரிய ஒளியினால் மாறிவிடும் என்பதால் ) இதை பனை ஓலைகளைக் கொண்டு இரவு நேரங்களில் மண் கலக்காமல் எடுத்து வந்து இந்த பூநீரை ஒரு பானையில் போட்டு இரண்டு படி நீர்விட்டு கலக்கி தெளிவு இருத்தி அடுப்பில்வைத்து எரித்து குழம்பு பதத்தில் எடுத்து ஒரு பீங்கான் பாத்திரத்தில் விட்டு வைத்து இதற்கு பால், பழம் வைத்து பூசைசெய்து சப்பிராணி தூபம் காட்டவும். இந்த பீங்கானை அப்படியே அசையாது வைத்து இருந்தால் நாற்பது, நாற்பத்திய்ந்து நாள் கழித்து அதன் மேல் உப்பு படரும். அந்த உப்பை எடுத்து வேறு பீங்கானில் போட்டுவரவும் இவ்விதம் உப்பு விளையும் வரையில் போட்டு அதை வெய்யிலில் வைத்து காய்ந்தபின் எடுத்து கல்வத்தில் போட்டு கோழி முட்டை வெண்கருவால் அதனை அறைத்து வில்லைசெய்து நிழலில் உலர்த்தி சட்டியில் வைத்து ஏழு சீலை மண் செய்து கோழி புடம் போடவும். அது வெளுத்து சுண்ணம் ஆகும் இதை எடுத்து குப்பியில் வைத்துக் கொண்டு வைரவர்க்கு பூஜை செய்து எடுத்துக்கொண்டு உபயோகிக்க சொல்கிறார். இந்தனை நாம் படித்தவுடன் இவ்வளவு எளிதாகத் தோன்றுகிறதே என்று எண்ணத் தோன்றும். ஆனால் அகத்தியர் மற்றும் இந்த வைத்திய முப்பு பற்றி மிக விரிவாக சொல்லியுள்ளனர். அதனைப்பார்ப்போம்.
அகத்தியர் குருநூல் முப்பு - 50 :-
பாரடா முன்னுரைத்த முப்புவெல்லாம்
பாரான சித்தருக்குஞ் சிவயோகிக்குஞ்
சேரடா வைம்பதுக்குள் சொன்னேன்முப்பு
செகத்திலுள்ள மானிடற்குச் செய்யவேண்டி
ஊரடா வேறுகொண்டா லுத்தருக்கு
உறுதியாய்த் திரேகமது பெலத்துபோச்சு
ஆரடா என்னைபோற் சொல்லப்போறார்
ஆச்சரிய முப்பூவின் பெருமைபாரே
                         பாடல் – 6
பாரென்ற வுருப்பைக் கொண்டுவந்து
பரிவாக சுத்த ஜலந் தண்ணிலிட்டு
சீருடனே கலக்கியே தெளியவைத்து
தெளிவாகக் காய்ச்சி நன்றாய் வற்றினாக்கால்
நீரிலே மறுபடியும் விட்டுக்கிண்டி
நிலையாக தெளிய வைத்துயிருத்துக்கொண்டு
வாரமுடன் காய்ச்சியே வற்றவைத்து
வாகாகயிப்படியே காய்ச்சு காய்ச்சு
                        பாடல் – 7
காச்சுகின்ற முறைக்கெல்லாஞ் சுத்தஜலம்விட்டு
கலக்கியே தெளியவைத்து காச்சுகாச்சு
ஆச்சிந்த பூவதுதான் வெளுத்துப்போகும்
அப்புறத்தே வைத்துயினி வறையக்கேளு
வாச்சதொரு கரியுப்பை வாரிக்கொண்டு
மானிடர்கள் கூட்டுமுப்பின் மார்க்கங்க்கேளு
பாச்சிந்தபடி சுத்த ஜெலத்தைவிட்டு
பரிவாகத் தெளிவிருத்து பத்துமுறை காச்சே
                        பாடல் – 8
முறையாக நிலவுப்பைச் சொல்லக்கேளு
    மூதண்ட பிர்மாண்ட விந்தும்பின்னை
    அறையான பூமியுட நாதமாச்சு
    ஆதியுப்பு சிவமென்று இதற்கேபேரு
    மறைவாக வொளித்துவைத்தார் நூல்களெல்லாம்
    மார்க்க மெல்லாந் சொல்லுகிறேன் வரிசையாக
    நிறையாகக் கல்லுப்பால் வளர்ந்ததப்பா
    நீற்றியே தின்பவர்க்கு சுன்னாம்பாச்சே 
                              பாடல் – 9
   சுண்ணமென்று லோகத்தோர் சுட்டுநீற்றி
   சுகமாகதாய் போலத் தின்பார்கேளு
   சுண்ணாம்புக் கல்லென்று இதற்கேபேரு
   சுந்தரவிபூதியு மிதற்கே பேரு
   எண்ணமுள்ள சுண்ணமபா காரச்சுன்னம்
   இயல்பான கல்லுப்பு சுண்ணமாச்சு
   தண்ணியிலே போட்டவுடன் நீரிப்போச்சு
   சவுக்கார குருவாச்சு சார்ந்து பாரே
                            பாடல் – 10
அகத்தியர் சொல்கிறார் நான் முன்பு கூறிய முப்பூ பற்றியது எல்லாம் சித்தனாக வேண்டியவர்களுக்கும், ஞானிகள் யோகிகளுக்கும் ஆகும். உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு உதவியாக அருமையான முப்புவைக் சொல்லப்போகிறேன்.
     உவருப்பை கொண்டுவந்து சுத்தமான நீரில் கரைக்கச் சொல்கிறார். தன்வந்திரி பணி நீரை சேர்த்து கரைக்கச் சொன்னார் ( பணி நீர் என்பது மார்கழி தை மாசி மாதங்களில் புதிய காடாத்துணியை வாங்கி அதை கடலை  கேழ்வரகு போன்ற விவசாயம் செய்துள்ள  தாவரங்களின் மீது இரவு நேரங்களில் விரித்து காலையில் சூரியோதயத்துக்கு மூன் எடுத்து பிழிந்து எடுத்த் நீராகும்) ஆனால் இவர் ஆற்றுநீரை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். இந்த ஆற்றுநீரில் மேற்கண்ட உவருப்பை கரைத்து பின்சிரித்து நேரம் வைத்து இருந்து தெளிவாக வடித்து எடுத்துக்கொண்டு காய்ச்சவேண்டும். இவ்விதம் 10- முறை கரைத்து, கரைத்து தெளிவிருத்துக் காய்ச்சி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவேண்டும். உவருப்புஎனப்படுவது சில இடங்களில் மண்சுவர்கள் பொரிந்து உதிரும் இந்த மண்ணை எடுத்து வந்து நீரில் கரைத்துக் காய்ச்சுவதும் முண்டு. சில இடங்களில் அழுகிய தாவரங்கள் பிராணிகள் சிறு குழந்தைகளின் சிறுநீரை விட்டு பக்குவங்கள் செய்தும் எடுப்பார். இயற்கையாக சில இடங்களை விளைவதும் உண்டு. இது வெடியுப்பு எனப்படும். இதன் பின் நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கரியுப்பு ( சோடியம் குளோரைடு ) எடுத்து இது போல் ஆற்று நீர் விட்டு கரைத்து தெளிவிருத்து காய்ச்சவேண்டும். இவ்விதம் பத்து முறை காய்ச்சி முன்போல் வெய்யிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
     இனி முறைப்படி நிலவுப்பு என்பதை பற்றிக் சொல்கிறார். அண்டம் என்று சொல்லப்படுகிற பிரமாண்டமான விந்துவானது பூமியுட நாதமாச்சு. இதுவே ஆதியுப்பு என்றும் சிவம் என்றும் இதற்குப் பெயர். இதை நூல்களில் சித்தர்கள் மறைத்துக் சொல்லியுள்ளனர்.இவை பற்றியெல்லாம் இனிசொல்கிறேன் என்று கூருகிறார். இதை நீற்றினால் சுண்ணாம்பு ஆச்சு. உலோகோர் சுண்ணாம்பை சுட்டு நீத்து உபயோகிப்பார்கள் இதற்கு சுண்ணக்கல் என்று பெயர் இது காரமுள்ள சுண்ணமாச்சூ இயல்பான கல்லுப்பு சுண்ணமாச்சு. இதை தண்ணீரில் போட்டவுடன் நீரிப்போகும். இது சவுக்காரக் குருவாச்சு. (சவுக்காரம்- சோப்பு) அதாவது சவுக்காரம் செய்ய பயன்படும் சோடியம் கார்பனேட் எனப்படும் சலவைச் சோடாவாகும்.
சார்வாகயிதை மறைத்தார் சித்தரெல்லாஞ்
சமுசயங்களில்லையப்பா வெளியாய்ச் சொல்வேன்
சீரான கல்லதுதான் துய்யவெள்ளை
செகத்திழ்ந்த கல்லுதான் மெத்தவுண்டு
நீறான கல்லொன்று மாகாதப்பா
நாமமெல்லாம் வெள்ளைக்கல் பிர்மகற்பம்
சாவாகயிதை எடுத்து அமுரிக்குள்ளே
யப்பனேயுவர்மண்ணைக் கரைத்துக் கொள்ளே
கொள்ளவே யதிலிந்தக் கல்லைபோடு
                          பாடல் – 11
கொள்ளவே யதிலிந்தக் கல்லைப்போட்டு
குமுறவே காய்ச்சிவிடு கட்டிப்போகும்
வெள்ளையாய் சுண்ணக்கல் கட்டிப்போகும்
வேதாந்த மூர்த்தி என்றுஇதற்குபேரு
கல்லென்ற கல்லதனை யண்டநீரால்
கருவாக வறைத்தனை வில்லையாக்கி
உள்ளபடி சொல்லுகிறேன் உலையிலூத
உத்தமனே சுண்ணாம்பாய் முறைத்துவூதே
                         பாடல் – 12
ஊதிடவே சுண்ணமுமாஞ் சலத்தைவாரு
ஓகோகோ நீர்வற்றும் நீரிப்போகும்
வாதிடவே பீங்கானில் வைத்து நீற்று
வளமாக ஜலம்மதிலே விட்டு
ஆகியே மண்டலமே வைத்தாயானால்
மேலே உப்புவந்து படரும்பாரு
சோதியா முப்பதனை வழித்து வாங்கி
சுகமாக பாலமொன்று தூக்கிக்கொள்ளே
                       பாடல் – 13
தூக்கியே வகையொன்று பலமொன்றாக
சுகமாகச் சூடனொரு பலமுங்கூட்டி
நோக்கியே அண்டநீர் விட்டுஆட்டி
நுனக்கமாய் வில்லைசெய்து உலரவைத்து
தாக்கியே யுலர்ந்தபின்பு ஒடுமுடி
சாதகமாய் சீலைமண்ணுஞ் சுத்திக்கொண்டு
பாக்கியே முழப்புடத்தில் நீறிப்போகும்
பண்பாய் இதைஎத்த்து பகரக்கேளே
                      பாடல் – 14
கேளப்பா வீரமொரு களஞ்சி கூட்டி
கிருபையுள்ள புழுகுதிலே களஞ்சிகூட்டி
நாட்டிலுள்ள சம்பழச்சார் விட்டுஆட்டி
தாளப்பா வில்லைசெய்து ரவியிற்போட்டு
முழப்புடத்திற் போட்டு வாங்கு
வேளப்பா சுண்ணமது கடுங்காரமாச்சு
வெகுசுருக்குப் பூநீறுகுரு விதென்றே
                   பாடல் – 15
     இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை சித்தர்கள் இதை மறைத்தனர் ஆனால் நான் வெளியாய் சொல்லுகிறேன். உலகில் கல்லு நிறைய உண்டு அதில் வெண்மையான கல்லுகளும் உண்டு. ஆனால் இது களர் நிலங்களில் மண்ணுக்கு அடியில் இருக்கும் இந்தக் கல்லை எடுத்துக்கொண்டு அமுரிக்குள்ளே உவர் மண்ணை கரைத்துக் கொள். இவ்வாறான கல்லை எடுக்கும் போது அது பனிக்காலத்தில் பணிநீரை எடுத்துக் கொண்டு காலையில் அடிக்கும் வெய்யிலின் உஷ்னத்ததையும் எடுத்துக் கொண்டு, இரவில் பொங்கி பூரிக்கும் இதையே பூநீர் எனப்படும் இத்தகைய கல்லில் இவ்வாறு பொங்கி இராசாயன மாற்றம் அடையாத கல்லாக இருக்க வேண்டும். நீற்றுபோன கல்லாகது இந்த பிர்மகற்ப கல்லை எடுத்து அமுரியில் மேற்கண்ட களர் நிலத்தில் உள்ள உவர் மண்ணை எடுத்து கரைத்து தெளிவிருத்துக் கொண்டு. அந்த பிர்மகற்பக் கல்லை போட்டு அடுப்பில் வைத்து காய்ச்ச பொங்கிவரும் இவ்விதம் காய்ச்சி சுண்டியபின் ஆறவிட்டு கல்லை எடுத்துக்கொள்ள கட்டிப்போகும். இதற்கு வேதாந்த மூர்த்தி என்று பெயர். பின் இதனை எடுத்து கோழி முட்டை வேங்கருவாள் அறைத்து வில்லையாக்கி காயவைத்து சட்டியில் சட்டியில் வைத்து துருத்தி கொண்டு உலையில் ஊத சுண்ணாம்பாகும்.
       இவ்விதம் உலையில் ஊதி எடுத்த சுண்ணக் கல்லை பீங்கான் ஜாடியில் போட்டுவைத்து தேவையான அளவு ஆற்று நீர் விட்டு ஒரு மண்டலம் (சிலர் -45நாள், சிலர் -48 நாள்) வைத்து இருக்கவேண்டும். இந்த நீரின் மேல் ஒருவித உப்புபடரும் இதனை பனை ஓலையால் வழித்து எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். இவ்விதம் உப்பு விளையும் வறை எடுத்து பதனம் செய்ய வேண்டும் இக்கலவையை இடையிடையே கலக்கி விடவேண்டும், எடுத்துபை அன்றன்று வெய்யிலி வைத்து உலரவைத்து பாட்டிலில் அல்லது பீங்கான் குப்பியில் வைத்துக் கொள்ளவேண்டும்.
       இத்தகைய ஜோதி போன்ற உப்பில் ஒரு பலம் எடுத்துக் கொள்ளவும். இதில் வீரம், புனுகு, பூரம் களஞ்சி கூட்டி  கல்வத்தில் போட்டு எலுமிச்சம்பழ
சார் விட்டு அறைத்து வில்லைதட்டி காயவைத்து பின்பு முழபுடம் போட்டு எடுக்க கடுங்காரச் சுன்னமாகும். இது பூநீற்று குரு என்று சொல்லப்படும். இனி வரும் பாடல்களில் இத பெருமை, மற்றும் இதனை சேர்த்து செய்யும் மருந்துகள் பற்றிக் சொல்கிறார். இதனை எல்லாம் நாம் மருந்து பற்றிய தலைப்புகளில் பார்க்கலாம். இன்னும் இதனை பலர் பலவிதமாக சொல்லுகின்றனர். அந்த சர்ச்சைகளில் நாம் இறங்க வேண்டியது இல்லை. பாட்டாளி நேரடியான கருத்தை பார்த்தோம். இது நிச்சயமாய் மருத்துவத்திற்கு பயன் படும். இன்னும் பூநீர்  சுத்தி, இதில் சேறும் வீரம், பூரம் போன்ற மருந்துகளைக் கட்டிச் சேர்க்கவேண்டும் என்பது போன்ற கருத்துக் உள்ளது. அதனை இது முடித்து அனுபவப் பட்டவர்களின் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப்பாடலைப் பொறுத்த அளவில் சொல்லப்பட்டதை நாம் பார்த்தோம் இனி அடுத்த தொகுதியில் சித்தர்களின் அகத்தில் சொல்லப்படும் முப்பு பற்றி பார்ப்போம்.                  
                                 
                                                                                                                                       

                                                             

No comments: