Thursday 14 November 2013

வரலாறு -- 3

வரலாறு -- 3
                            


சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அத்துணிவு 

தாழ்ச்சியுள் தங்குதல் தீது  - குறள் 




                               உள்ளடக்கம்
முன்னுரை (2) தமிழர் ஆரியர் வாழ்வியல் கலப்பு (3) திருவள்ளுவ நாயனாரின் கடவுள் கருத்து (4) புராணங்கள் (5) ரோமச சருக்கம் (6)  யுவனாசுவ சருக்கம் (7) அகஸ்தியர் ஞானம் ஒன்பது (8) அகஸ்தியர் ஞானம் ஆறு (9) காகபுசுண்டர்                                        ஞானம் (10)  சட்டைமுனி ஞானம் (11)  பதஞ்சலி விஜயம் (12) தொகுப்பு முடிவுரை

சித்தர்களின் மூடநம்பிக்கை - ஆரிய எதிர் கூவல்களும் 
முன்னுரை:- இந்த தொகுப்பை எழுதப் புகுமுன் இதில் வரும் கருத்துக்கள் நாத்திக, ஆத்திக என்ற பாகுபாடு இன்றி சித்தர்களின் நோக்கம் மனித நேய நல்வாழ்வு கருதிய வெளிப்பாடாகும். சித்தர்களின்நூல்களை படிக்கும்போது நாம் ஏன்? எதற்கு? என்ற வினாக்களை தொடுப்போமாயின் அவர்களின் நோக்கம் நமக்கு புரியும். மனிதனின் ஆசையே அவனின் பரிணாமவளர்ச்சிக்கு உதவியது. பறக்க வேண்டும் என்ற ஆசையே விமானம் கண்டுபிடிக்க முடிந்தது. இதையெல்லாம் மனிதன் இயற்கையின் வழியாகத்தான் தெரிந்து கொண்டன் ஒவ்வொரு சிந்தனையின் வெளிப்பாடு மனிதனின் சமுக முன்நேற்த்திற்கு உதவியது. தன் கண் முன் உடன் வாழ்ந்தவர்களின் இறப்பு, உயர்வு,  தாழ்வு,  போன்ற பிரச்சனைகள் தான் வாழ வேண்டும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற தன்முனைப்பு, அவனை காரணா, காரியங்களை ஆராய முற்பட்டான் அன்றைய சூழ் நிலையில் புரியாத இயற்கை நிகழ்வுகளுக்கு (இடி,மழை, நோய்,.........) ஏதோ காரணம் இருக்க வேண்டும் இதை எல்லாம் இயக்குபவன் ஒருவன் அவனை கடவுள், இறைவன், பரமபிதா, என்று பலவித பெயர்கள் தங்களின் பரிணாம வளர்ச்சிக்கு தக்கவாறு சொல்லிக் கொண்டான் பின் அப்படிப் பட்ட ஒன்று இருக்குமானால் அதன் அன்பைப் பெறவேண்டும் அதனைப் பார்க்க வேண்டும் என்று  அதை  அடைய விரும்பினான். சிலர் அதற்கான முயற்ச்சிகளில் ஈடு பட்டனர், இவையெல்லாம் அவனுக்கு இயற்கையே கற்பித்தது. இதில் சிலர் காடு, மலை என்று பல இடங்களில் தேடினார்கள் கிடைக்கவில்லை பின் வெளியில் தேடுவதை விடுத்து தங்களுக்குள் தேட ஆரம்பித்தார்கள். இவர்கள் ஒரு கூட்டத்தார். இன்னொரு கூட்டத்தார் அலையவில்லை மனிதனின் அறியாமையையும் சூழ் நிலையும் முதலில் இயற்கை சீற்றங்களை கண்டு பயந்து அதற்கு தலை வணங்க முற்பட்டான். அவற்றையே தெய்வமாக்கிக் கொண்டான் வலுவான மிருகங்களை தெய்வங்களாகவும் பின் அவற்றையும் மனிதனையும் இணைத்து கற்பனை உருவங்களை உருவாக்கி வணங்கினான் அதிலும் திருப்த்திபடாத மனிதன் தன்னைப் போல் உருவகப்படுத்திக் கொண்டான் தன்னைப் போல் அவற்றிற்கும் ஆடை ஆபரணங்கள் மனைவி மக்கள் சண்டை சச்சரவுகள் கதைகளை ஏற்ப்படுத்தினான். தாங்கள் உண்பதையே இவன் படைத்த இறைவனுக்கும் படைத்து அதை இவனே பிரசாதம் என்று பெயரிட்டு பெற்றுக் கொண்டான் மனிதன் கூட்டமாக சேர்ந்து வாழப்பழகியவன், ( ருக்வேதத்தில்- மனிதன் கூட்டமாக வாழ்ந்தான் அவனுக்கு ஒரு தலைவனைத் தேர்ந்து எடுத்துக் கொண்டனர் அவனுக்கு அதிபதி என்று பெயர் கூட்டத்திற்கு கணங்கள் என்று பெயர் பிற்காலத்தில் அவ்விரு பெயர்களையும் இணைத்து கணபதிஎன்று ஒரு தெய்வத்திற்கு பெயர் கொடுத்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர் ) அதனால் ஒவ்வொரு  கூட்டத்தாரும் தங்களுக்குள் ஒருதெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டதால் வித்தியாசம் தெரிய சாம்பலை விபூதி என்று பெயரிட்டு அதனைப் பூசிக் கொண்டவன் சைவனான் ராமத்தை இட்டுக்கொண்டவன் வைஷ்ணவன் என்றும் குங்குமத்தை வைத்துக் கொண்டவன் சாக்கதன் என்று பலரும் அடையாளச் சின்னங்களை ஏற்ப்படுத்தி வழிபாடு செய்து தான் படைத்த கடவுளுக்கே பயந்து வாழ்ந்து வரும் மனிதனின் அவலங்களைக் கண்ட சித்தர்கள் அவனது அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் சகுன நம்பிக்கைகளை கண்டித்த சித்தர்களில் சிலரின் கூற்றைப் பார்ப்போம்.
தமிழர் ஆரியர் வாழ்வியல் கலப்பு:-
தமிழ் நாட்டில், தமிழர் பண்பாட்டில் ஆரியம் கலந்த அன்றே தமிழனின்  வாழ்வியலில் தனித்தன்மை போய்விட்டது என்றால் மிகையாகாது. மொழி, கலை, இலக்கியம், வாழ்வியல் நடை முறைகள், மருத்துவம் என்று பல் துறைகளிலும் அதன் தாக்கம் நிறைந்துள்ளது. இன்று அய்யா பெரியார் அவர்களின் பார்ப்பனிய மூடனம்பிக்கை ஆரிய ஆதிக்கத்தை எதிர்நோக்கியது போல், அன்றைய காலக்கட்டங்களில், புத்தர், கபிலர், மகாவீரர், சித்தர்கள் ஆரியத்திற்கு கடும் எதிர்ப்பு கொடுத்தார்கள். ஆனால் அன்றைய மன்னர் ஆதிக்கச் சூழலில் நேரடித்தாக்குதல் செய்யயிலவில்லை சிலை வழிபாடு, சடங்குகள், சம்பிரதாயங்களை பற்றி எழுப்பிய கேள்விகளையும் பார்ப்பனியம் இவைகள் எல்லாம் ஞானிகள் போன்றவர்களுக்கு மட்டுமே செயல் படுத்த முடியும் பாமரர்களுக்கு அல்ல என்ற ரீதியில் உள்வாங்கிக் கொண்டது. ஆனால் இவர்களது திசை திருப்பல்கள் அறிவாசான் பெரியாரின் எதிர்ப்பில் தன் நிலைகுலைந்தது இன்றைய சமுதாய மாற்றத்தில் பெரியாரின் பங்கு மதிப்பிடமுடியாத பெரும் பங்களிப்பாகும்.              
   நம்மிடையே ஆரியர்களின் வேதங்கள் என்று கூறப்படும் ருக,யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்கள் இதன் அடிப்படையில் தோன்றிய உபநிடதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என்ற வழியினைப் பின் பற்றி சிலை வணக்கம், யாகங்கள் போன்றவற்றை ஏற்றுக் கொள்வோர் வேதாந்திகள் என்பர் இவர்களுக்கு வேதமே முடிவானது அதில் கூறியது தான் இறுதியானது, சரியானது என்னும் கொள்கை உடையோர் இவர்கள் வேதாந்திகள் எனப்படுவர் இவர்கள் சடங்கு யாகம் சகுன வழிபாடுகளில் நம்பிக்கை உடையோர் உபநிடத கருத்துக்களைக் கூடபின்தள்ளி விடுவர்.சிந்தனை செய்து அறிவுப் பூர்வமாக முடிவு செய்வதை சித்தாந்தம் என்றும் இவர்களை சித்தாந்தவாதிகள் என்றும் அழைப்பர். இவ்வழி வந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள். இனி சித்தர்களின் கருத்து பார்ப்போம்.
திருவள்ளுவ நாயனாரின் கடவுள் கருத்து
ஞண வெட்டியான் ஆயிரத்து ஐநூறில் திருவள்ளுவநாதர் தன் வரலாறு  கூறுமிடத்து 31-வது பாடலில் தன்னை ஒளவையார் குலத்தில் வந்த வள்ளுவன் எனக் கூறிக் கொள்கிறார் இவரது எதிர் கூவல்களை பார்ப்போம் பாடல் :-
     ஈரேழுலோகம் பதினாலுயர்ந்திரு காலுயர்ந்த
     நேரானசாதி ஆண்பெண்ணிரண்டும் நிரந்தரமாய்
     பேரான செங்கதிர் சந்திரனுண்டு அண்ட பிண்டமுண்டு
     சீரான அன்னமுந் தன்னிருமுண்டு தெய்வமின்றே.
பதினாலு உலகங்களிலும் சாதி ஆண் பெண் இரண்டே தவிர வேறு சாதிகள் இல்லை சூரியன், சந்திரன், இருப்பது உண்மை அண்டம், பிண்டம், உணவு, தண்ணீர், இருப்பது உண்மை ஆனால் தெய்வம் என்பது இல்லை என்று   கூறுகிறார். மற்றும் அடுத்த பாடலில் கூறுகிறார்.
பாடல் :-524.
     பூசைகள் செய்தேன் காண்- சிவத்தியான
     பூசைகள் செய்தேன் காண்           
     வாசிக்குதிரை மேலேறிக் கேசரத்தின்
     வழியோடேசென்றுச்  சுழியறியாமலும்
     வேசிக்குளாசை விரகத்துடனேயான்
     வெறும் பூசைம ணியாட்டி வீணுக்கேயான்
     ஆசித்து சற்குரு தெய்வமிது வென்று
     அர்ச்சித்து ஆத்துமந்தண்ணையறியாமல்
     நேசித்துப் பூசை நிஷ்டை யாரியாமலும் நின்றே
     நிமித்தமாய் கண்டு உருசெய்தேயான்.
சுவாசமகிய குதிரை மேலேறி தலைவழி உச்சி சுழிமுனையை அறியாமல் வேசியின்பால் மனதைசெலுத்தியும் அர்த்தமற்ற மணியாட்டி செய்யும் பூசை செய்து வீணாக இதுவே தெய்வம் இதுவே குரு என்று நம்பி அர்ச்சனைகள் செய்து வந்தேன். ஆனால் என்னுள் உள்ள ஆத்துமாவை அறியாமல் மூட பூசை செய்தேன்.
பாடல்-525
     கோலமரியாமல் காலையில்வில்வக் கொழுந்தை
     முறித்தினி கூகைகள் போலவும்
     சாலவுந்தேவார மோதித்துதித்துடன்
     சங்கையரியாமல் பங்கம் பட்டேயினி
    காலைதனில் எழுந்து ஆலையஞ சுற்றிக்
    கருத்தினில் வாசியைக் கண்டு துதியாமல்
    சீல மலரையும் உயிரென்று அறியாமல் சென்று
    பரித்துயான் கொண்டு வந்தர்ச்சனை.
பூசை என்பது பற்றி அறியாமல் அதிகாலை எழுந்து வில்வக் கொளுந்தையும் பூவும் ஓர் உயிர் என்று அறியாமலும் பறித்து கூகை (ஆந்தை) போலும் தேவாரம் கத்தி பாடியும் ஆலயம் சுற்றி அர்ச்சனை செய்தேன் ஆனால் வாசியை கருத்தில் கண்டு துதியாமல் விட்டேன்.
பாடல் -628  
     புத்தியில்லாமல் வெகுகொடி மந்திரம் புலம்பியுமே
     சத்தியில்வழ்ந்து தியங்குவர் காண் சர்வலோக மெல்லாஞ்
     சுத்தி சாதியின் பேதந்தன்னைச் சொல்லுமவர்
     எத்திப்பனத்தைப் பறிக்குந்திருடர்  இயம்புவேனே
புத்தி இல்லாமல் கோடிக்கணக்கான மந்திரங்களை கூறி புலம்பி வாழ்ந்து மயங்குவார் உலகமெல்லாம் சுற்றி சாதி பேதங்களைக் கூறி பணம் பறிக்கும் திருடர்கள் என்றும் சொல்கிறார் இது போல் எண்ணற்ற பாடல்களில் பார்ப்பனர்களையும் அவர்களது இதிகாச புராணங்களையும் சடங்கு ஆச்சாரங்களையும் கேலி செய்தும் எதிர்த்தும் சாடுகிறார்.
பாடல்
    கருவதுவுந்தரித்த தெங்கே சிவ சிவ
    காயமாயுதித்து வந்த கருத்துமெங்கே
    அருவுருவானதெங்கே அன்டபிண்டம் 
   ஆதியுமந்தமுங் கூடிஅமைந்த தெங்கே
   உருவடி நடுவுமேங்கே ஓங்க்காரமென்னும்
   உடலுயி ரெடுத்தவிதம மெங்கே
   மருவிய நாள் வேதஞ்சொல்லுமோ  மதி கெட்ட
   மாந்தர்களிதை அறிந்து உரைப்பீர்.
இவ்வாறு சித்தர்கள் கடவுள் உருவ வழிபாடு மறுப்பினும் முக்கியமாக பார்பனிய கருத்துகளையும், அவர்களது சடங்குகள் சம்பிரதாயங்கள், யாக முறைகள் போன்றமூடச் செயல்கள் குறித்து எண்ணற்ற கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களையும் சொல்லி பார்பனிய செயலை கண்டித்துள்ளனர். கடவுளை மறுக்கும் சாங்கியம், உலோகாயதத் தத்துவங்கள் நீண்டகாலமாக இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் நிலவிவந்தவையே, சித்தர்கள் வாழ்ந்த காலம் புத்தமும், சமணமும் எழுச்சி பெற்ற காலமாகவும் வைதிகம் அதை எதிர்த்து எழுச்சி பெற்ற காலமாக இருக்க வேண்டும் இவர்களது பாடல் கருத்துக்களில் வைதிக மதத்தின் உருவ வழிபாடு, சடங்கு போன்ற மூடக் கருத்துக்களை ஒதுக்கியும் அதேவேளையில் புத்த சமணக் கொள்கைகளில் உள்ள உயிர்க் கொல்லாமை, ஒழுக்க நெறிகளையும் எடுத்துக் கொண்டு இடைப்பட்ட நிலையை  எடுத்தனர் என்று கொள்ளலாம். எனவேதான் திருமூலர் கூறும் போது ‘அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் என்று கூறி சிவம் என்பது அன்புதான் என்றும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனக் கூறிஅனைத்து மதங்களுக்கும் வேறு பாடுகளை கலைந்தும் நேரடியாக கடவுள் மறுப்பை கூறாது மனித உடலில் இறைவனையும் அவன் வாழும் விதத்தனையும் கூறி புதிய சித்தாந்தத்தை முன்வைத்துள்ளார். இதுபோல் இஸ்லாம் மதத்தில் வாழ்ந்த ஒருபிரிவினரான 11-12 நூற்றண்டுகளில்வாழ்ந்த சூபிச ஞானிகளும் சித்தர் வழிவந்தவர்களே.
தீர்த்தமாடிக் கொள்வீர் தெளிந்தவர் போல்
 செபதப சாச்திரங்களோதிக் கொள்வீர்
 யாத்திரை தீர்த்தங்களாடி நதிகள்தோரும்
அலைந்து அலைந்து சுற்றி அலையுறீர்
மாற்றியே பிரப்போமென்று பொய்ப் பிரட்டு
வாய் சமத்து சாஸ்திரம் சொல் மடையர்களே
பாத்திரா பாத்திராபாத்திரமரியா பாவிகள்தான்
பாடுபட்டுங் கூறறியா மாடுகள்தான்
மற்றும் ஞானவெட்டியாணில் பிராமணிய கருத்துகளுக்கு சாட்டையடி கொடுக்கும் விதத்தில் கூறுகிறார். மாற்றிப் பிறப்போம் என்று பொய் பேசுகின்ற மடையர்களே, நீங்கள் எல்லா வற்றையும் அறிந்தவர்கள் போல், தீர்த்தமாடிச் செபதபங்கள் செய்கிறீர்கள், யாத்திரை செய்கிறீர்கள் வாய்பேசும் வீணர்களே புத்தியில்லா மாடுகளே  என்று சாடுகிறார் மற்றும் ஒருபாடலில் புன்னிய நதிகளில் தீர்த்தமாடுவோரே அதே குளத்தில் இருக்கும் மீன், தவளை இவை என்னவாகும் என்று கேட்கிறார். இனி சிவாக்கியர் என்னும் சித்தர் கூற்றினை பார்ப்போம்.









சாத்திரங்களோதுகின்ற சத்த நாத பட்டரே
வேத்திறைப்பு வந்தபோது வேதம் வந்துதவுமோ
மாத்திரைபோதும் உம்முள்ளே அறிந்தொக்க வல்லிரேல்
சத்திரைப்பை நோய்களேது சத்தி முத்தி சித்தியே
                                         :----- சிவவாக்கியர்
வீடெடுத்து வேள்வி செய்து மெய்யரோடு பொய்யுமாய்
மாடு மக்கள் பெண்டிர் சுற்றமென்றிருக்கு மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கை ஓலை வந்தழைத்திடில்
ஆடுபெற்ற விலை பெறாதுகானும் உடலமே
                                     :--------- சிவவாக்கியர்
குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கள் தோரும் மூழ்குறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்துன் மாசு அறுக்கிலீர் 
மன்டையேந்து கையரை  மனத்துள் இருத்தவல்லிரேல்
பண்டை மாலயன் தொழப் பணிந்து வாழ்தல் ஆகுமோ
                                       :------ சிவவாக்கியர் 
ஏ குருக்களே நீ நோய் வாய்ப்பட்டு கபம் நிலை பிறந்து மூச்சு திணறி இறக்கும் தருவாயில் உன்வேதம் வந்து உதவுமோ ( அவர்களின் சடங்குகள், வழிபாடுகள் முறையினால் உயிர் பிழைக்க முடியுமோ )ஒரு நொடிப் பொழுது உன்னில் இருப்பதை அறிந்து கூடவல்லிராயின் இந்த நோய்கள எது? இச் சித்தர்கள் ஏன் இவ்வாறு கூற வேண்டும் என்பதை சிறிது சிந்தித்து பார்க்கவேண்டும். ஆரியம் மக்களிடையே வகுப்பு பேதத்தையும்,  மூடபழக்கத்தையும்  மக்களிடையே பரப்பியும், எங்கும் பார்ப்பனர் அல்லாதோர் படித்து அறிவு பெற்றால் அவர்கள் தங்களுக்கு அடிமைகளாக இருக்கமாட்டார்கள் தங்கள் இன்ப வாழ்வுக்கு போட்டியாலர்களாக வந்துவிடுவார்கள் என்ற எண்ணம காரணாமாக வருணப் பகுப்புகளை உண்டாக்கி இது இறைவன் கூறியது என்று கீதை, மாகாபாரதம், இராமாயணம் என்று பலவித புராண கதைகளை உண்மைபோல் பொய்யான தகவல்களை பார்ப்பனீயம் கூறி  மற்றவர்களை அடிமை கொண்டதை கண்டு கூறியதே சித்தர்களின் கருத்தாகும் .சித்தர்கள் வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் இணைத்து அன்றைய கால சமயப் பூசல்களுக்கு வழிகாண்பதுதான் திருமூலர் போன்றவர்க்ளின் கருத்தாகும் பதஞ்சலியின் யோகசூத்திரத்தில் கூறப்படாத சில கருத்துக்களை தங்கள் நிலைப்பாட்டில் எடுத்துள்ளனர். ஆனால் சிலசித்தர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்கள் என்பதே உண்மை.
    வீடுகட்டி பெரும் செல்வந்தராக பல யாகங்கள் செய்து, மாடு, மக்கள் சுற்றத்தார், மனைவி என்று வாழும் மனிதர்களே இறக்கும் நேரம் வந்து உயிர்பிறிந்தபின் உங்கள் உடல் ஒரு ஆடு பெறக கூடிய விலை கூட பெறாது என்பதை நினைத்தது உண்டா கறந்தபாலும் மீண்டும் மார்பில் போய்சேருமோ மோரிளிருந்து கடைந்த எடுத்த வெண்ணை மீண்டும் மோராகுமோ, உதிர்ந்த பூ, உதிர்ந்தகாய், மீண்டும் மரத்தில் மீண்டும் ஒட்டிக் கொள்ளுமோ இது இயற்கை நியதியாக இருக்கையில் மனிதன் மட்டும் மறுபிறப்பு உள்ளது என்று கூறுவது மூடத்தனம் இறந்தவர் மீண்டும் பிறப்பது இல்லை என்று   கூறுகிறார். மனித இனம் அனைத்தும் ஒரே இனம் என்ற சித்தர்களின் கொள்கை வைதிக வர்ணாசிரம கோட்ப்பாட்டிற்கு எதிரிடையாக உள்ளது கடவுள் என்று தனியாக் இல்லை கடவுளைத் தேடி அலைய வேண்டியது இல்லை தன்னுள்ளேயே கடவுளைக் காணலாம் என்பது சித்தர்களின் முடிபு சித்தர்களும் ஞானிகளும் தங்கள் வாழ்வியலில் பெற்ற துன்பியல்கள் அவமானங்கள் இன்பியல்புகள் அனுபவங்கள் காரணமாக உண்மையை அறியும் ஆவலில் பலவிதக் கஷ்டங்களை எல்லாம் கடந்து அறிவுபூர்வமாய் சிந்தனை செய்ததின் காரணமாக இக்கருத்துக்கள் தோன்றியிருக்கலாம் எவ்வு உயிருக்கும் தீங்குசெயாமலும் அன்பு செய்தாலும் பலன் கருதா தொண்டு செய்தலுமே உண்மையான் இறை வணக்கம் என்று               கூறுக்கின்றனர்
சித்தர்களும், ஞானிகளும் தந்தை பெரியார் போன்றவர்களும் சாதி, சமயங்களைக், மூடநம்பிக்கைகளை கண்டிபதனால் ஒன்றுபடுகின்றனர் இன்றைய இளைய சமுதாயத்தினர் பார்ப்பனியக் கருத்துக்களையும் அவர்களின் ஏமாற்று புராணங்களின் உண்மை தொகுப்புகளை அறிந்து இருக்கவாய்ப்பில்லை  எனவே சில புரானகருத்துகளை இதில் தெரிவிப்பது சித்தர்களை புரிந்து கொள்ள உதவியாக இறக்கும்.
புராணங்கள் :- புராணங்கள் 18 – என்பது மரபு இதில் சிவனுடைய பரானங்கள் பத்து. இதில் மிகவும் சிறந்தது சூதசம்கிதை என்பதாகும்.     சூதமுனிவரால் கூறப்பட்டதாகும்.  இத்தகைய புராணங்களையும் புரானக்கருத்துக்களையும் பிராமணர்கள் கையாண்ட வழிகளில் ஒன்று வசதி படைத்தவர்களைக் கொண்டு தங்கள் கருத்துக்களை உள்ளடக்கிய தலபுராணங்கள் போன்ற நூல்களை பதிப்பித்து வெளியிடுவது இதனால் உங்களுக்கு பலநன்மைகள் உண்டாகும் என்பது போன்ற கருத்துக்களை கூறி பார்ப்பனியக் கருத்துக்களை பரப்பிவந்தனர். உதாரணம் 1912- ம் வருடம் சென்னை கோமலேச்வரன் பேட்டை சச்சிதானந்தன்  அச்சு இயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்ட சூதசம்கிதை நூல், இது செள. பாலசரஸ்வதி தேவகுஞ்சரியம்மாளால் வடமொழியில் இருந்து மொழிபெயர்த்து அச்சிடப்பட்ட நூல் சூதசங்கிறதா சாராம்சம் என்பதில் பதினொராவது அத்தியாத்தில் ஜாதிய வரலாறு கூரியதைஇங்கு தருகிறேன்.  
முன்காலத்தில் ஜலப்பிரலயம் முண்டாக உலகமெல்லாம் ஜலத்தில் (நீரில்) அமிழ்ந்து இருந்தது. இருள் மூடிக் கிடந்தது. அந்தப் பிரளயத்தில் திருமால் யோக நித்திரை செய்து கொண்டிருந்தார். அந்த திருமாலுடைய உந்தியில்  (தொப்புள்) இருந்து ஒரு பொன்மயமான  தாமரை பூத்து இருந்தது. அந்தத் தாமரைப் பூவில் சிவ பெருமான் திருவருளால் பிரமதேவன் உற்பவித்தான். அந்தப் பிரமனுடைய முகத்திலே பூர்வ வாசனையின் காரணமாகப் பிராமணர்கள் பத்தினிகளோடு பிறந்தார்கள். புஜத்தில் இருந்து(கை) சத்திரியர்கள் மனைவியரோடு தோன்றினார்கள், தொடையினின்று வைசியர் (வணிகர்) தன்பாரியாளுடன் உதித்தார்கள், பாதத்தினின்று சூத்திரர் (விவசாயி மற்றும் வேலையாட்கள்) தன் மனைவிகளோடு பிறந்தார்கள். இந்த நான்கு ஜாதிகளினுடைய கலப்பினால் பல சாதிகள் உண்டாயின. உயர் குல பிராமணனுக்கும் தாழ்ந்த குல  பெண்ணுக்கும் பிறந்தவன் அனுலோமன் என்று பெயர் பெறுவான். உயர்குலத்து பிராமணப் பெண்ணுக்கும் தாழ்ந்த குல  ஆணுக்கும் பிறந்தவன் பிரதிலோமன் என்று பெயர் பெறுவான். அனுலோமனுக்கும் பிரதிலோம பெண்ணுக்கும் பிறந்தவன் அந்தராளன் எனப்படுவான். இதில் முதல் நாலு சாதிகள் உத்தமம், பின்னர் கூறிய நாலு சாதிகள் மத்திமம், இவர்களுடைய கலப்பினால் பிறந்தவர்கள் சங்கர சாதி எனப்படும். இவர்கள் தத்தம் சாதிகளுக்கு ஏற்ப கூறிய ஆசாரம் தவறாமல் நடந்தால் முத்தியடைவார்கள் வர்ண (சாதி) பேதங்கள் உலகுக்கு உபகாரமாகவே பிரமதேவனால் உண்டாக்கப்பட்டன. இந்த சாதி பேதங்கள் உடலைப் பற்றியனவேயன்றி உயிருக்கு சம்பந்தமில்லை. ஆனாலும் சீவன் உடலையே நான் என்று கருதியிருப்பதால் சம்பந்தம் உண்டு. இதனாலேயே பந்தம் உண்டாயிற்று இவர்கள் வர்ணாசிரம நெறி தவறாமல் நடந்து சிவ பக்தி செய்தல் வேண்டும். இவர்கள் சாதியாசாரத்தை கடந்து நடப்பாரானால் நரக அவத்தையை அடைவார்கள் எனவே வருண தர்மப்படி நடத்தலே முத்தி யாகும்.
                     :- சூதசங்கிறதா சாராமிர்த்த வசனம் 22- பக்கம்  
இது வியசபார்ப்பனரால் எழுதி சூதரால் பரப்பப்பட்டதகும்.  வியாச பார்ப்பனரும் பிராமணப் பெண்ணுக்கு பிறந்தவர் அல்ல இவர் பராசரன் என்ற பிராமண முனிவனுக்கும் மச்சகந்தி என்ற மீனவப் பெண்ணிற்கும் பிறந்ததாக  மகாபாரதம் ஆதிபர்வதத்தில் கூறப்பட்டு உள்ளது.இதன்படி அனுலோமனாவார் இது போன்ற கதைகளை மக்களிடம் பரப்பி மாந்தர்களை ஒரு சமுதாய கட்டுக்குள் வைத்து இருந்தனர்.மற்றும் பெளத்த, சமண மதங்களின் மீது  பிராமணர்களின் வெறுப்பும் அதனால் எழுந்த தாக்கம் பற்றி மருதவன புராணம்  என்னும் நூலில உரோமச சருக்கத்தில் எழுதியுள்ளவற்றை தருகிறேன்.
ரோமச சருக்கம் :--
கேளும் ரோமச முனிவரே அகஸ்த்தியர் முதலான ரிஷிகள் எல்லோரும் திருவெண்காடு சென்று பலநாள் ஆயின ஆகையால் சிவ பூசைக்குரிய ஆச் சாரியார் ஒருவரும் இல்லை, சரியை, கிரியை, யோகம, ஞானம ஆகிய நாற்பதத்தோடு நடந்த சைவ விதி மார்க்கங்கள் அழிந்து போகலாயின        பகலவனுக்குப் பின் இரவில் திருடர்கள் , துஸ்டபிரானிகளும் மேவுற்று சஞ்சரித்து பரவுதல் போல ஆச்சரியரின்மையால் இச் சைவ மதம் குன்றி பெளத்த, சமண மதங்கள் மேலிட்டுப் பரவலாயின. புலிக்  கொடியை உடையவனாம் அக்காலத்தில் இப்பகுதிக்கு அரசனுமான சோழராசன், தன் மதி மயங்கி சமண மதத்தை சார்ந்தான். இதை அறிந்த பாண்டியாராசன் சோழாராசனுடன் போர்புரிந்து அரசனை வென்று அவன் ராஜ்ஜியத்தை கைப்பற்றி கொண்டு பின் மதுரைக்கு போய்விட்டான். சிலகாலத்திற்கு பின் அப் பாண்டிய ராசனும் சமணர்களின் துர்போதனையால் கவரப்பட்டு தானும் சமண மதத்தைச் சார்ந்தான். இதனால் செங்கோன் மன்னனாய் இருந்த பாண்டியன் தன் மதி இழந்து நீதி முறை தவறி அரசு செலுத்தி வந்த தன்மையை அறிந்த ஓர் வேடுவன் அவனோடு போர் புரிந்து அப்பாண்டியனை வெற்றி கொண்டு நாட்டை கைப்பற்றி அவனை கானகத்துக்கு ஓடும்படி செய்துவிட்டான் அவனுடன் அவனைச் சார்ந்த சமணர்களு வனவாசம் சென்றனர்.
   இவ்வாறு உலகம் சமணர்கள் ஆதிக்கப்பட்டு சைவம் குன்றியிருந்த காலையில் விநாயகக் கடவுள் ஸ்ரீ மகாலிங்கப் பெருமானை வணங்கி என் பிதாவே ! இது என்ன விபரீதம் ! சிருட்டி ஆரம்பத்திலேயே இச் சமணர்கள் குழாங்கள் எங்கும் பரவிவிட்டனரே இத்தேசத்து மன்னனும் தன் மதியிழந்து அச்சமணர் சமயத்தில் சார்ந்து விட்டதன் காரனம்யாது? உங்களுக்கு நடக்க வேண்டிய பூசையோ குறைவு பட்டு இருக்கிறது இவைகளுக் எல்லாம் காரணம் என்ன என்று வினவ, ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் தன் மூத்த பிளையாகிய விநாயகனை அருகில் அழைத்து உச்சி மோந்து பரம கிருபையுடன் என் அருமைக் குழந்தாய் நமது சைவ சமய மார்க்கங்களின் பெருமையை யாவரும் உணரும்படிச் செய்ய இருக்கிறோம். நிழலின் அருமை வெய்யலின் பின்தான் தெரியும். இச் சமணர்களை வேரோடு தொலைக்க என் அன்பன் ஒருவன் வரப்போகிறான். அவன் உருவத்தில் சிறியவனாயினும் (திருஞானசம்பந்தன்) நம் இடத்து பக்தியில் பெரியோன். தவத்தில் சிரேஷ்டன் அவன் வரும்வரை நீயே எம்மை பூசை செய்து கொண்டு வரவும் என்று கூறினார்.
    சிறிது சிந்தித்து பார்ப்போமாயின் சர்வ வல்லமை படைத்தவர் கடவுள் என்றால் சமண, புத்த மதத்தினரை தன் சக்தியால் மனமாற்றம் செய்து சைவத்தினை பின்பற்றச் செய்ய இயலாதவர் எவ்விதம் கடவுளாக இருக்கமுடியும்.  உலகில் ஏன் இத்தனை மதமும்  கலவரமும் உலகளவில் பல மதங்கள் இருக்கின்றன இதில் எந்த கடவுள் வலிமை வாய்ந்தவர் இதையெல்லாம் மனிதன் தன் சுயநலம் கருதி தோற்று வித்தைத்தவிர வேறு இல்லை. இனி சிவாக்கியருடைய கருத்துக்களை பார்ப்போம்.
      ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
      வாசலிற் பதித்தகல்லை மயங்கவே மிதிக்கிறிர்
     பூசனைக்கு வைத்த கல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
      ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே    :- சிவவாக்கியர்             
ஒரு கல்லை இரண்டாக உடைத்து ஒரு பாதியை வாசற்படி கல்லாய் போட்டுமிதித்து செல்கிறோம், இன்னொரு பாதியில் காத்து மூக்கு என்று செதுக்கி விட்டால் அது கடவுளாகி விடுமா இதற்க்கு பூவும் நீரும் விட்டு வணங்க்குறீர் அப்படியானால் ஈசனுக்கு உகந்த கல் எது இவ்வாறு பலவிதங்களில் சாடுகிறார். இனி பாம்பாட்டி சித்தர் கூறுவது பார்ப்போம்.
       







பொய்மதங்கள் போதனை செய்  பொய்க்குருக்களை                      
       புத்தி சொல்லி நன்னெறிய போகவிடுக்கும்
       மெய்மதந்தான் இன்னதென்று மேவவிடம்பும்
       மெய் குருவின் பதம் போற்றி யாடாய் பாம்பே 
                                            :- பாம்பாட்டி சித்தர்
       நாறும் மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
       நாளும் கழுவினாலும் அதன் நாற்றம் போமோ
       கூறுமுடல் பலநதி யாடிக் கொண்டதால்
       கொண்ட மலம நீங்காது என்று ஆடாய்பாம்பே
                                            :- பாம்பாட்டி சித்தர்
       உளியிட்ட கற்சிலையில் உண்டோ பலன்கள்
       உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி
       புளியிட்ட செம்பிற் குற்றம் போமோ அஞ்ஞானம்
       போகாது மூடர்க் என்று ஆடாய்பாம்பே.
                                            :- பாம்பாட்டி சித்தர்
       சதுர்வேதம் ஆறுவகை சத்திரம் பல
       தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம்
       விதவிதமான தான வேறு நூல்களும்
       வீணான நூல்கள் என்றாடாய் பாம்பே
                                          :- பாம்பாட்டி சித்தர்
        பூசை செய்ததால் சுத்த போதம் வருமோ
        பூமி வலஞ்செய்ததனார் புன்னியமுண்டோ
        ஆசையற்ற காலத்திலே ஆதிவஸ்துவை
        அடையலாமென்று துணிந்து ஆடாய்பாம்பே
 இவ்வாறு பாம்பாட்டி சித்தரின் பலபாடல்களில் ஆரிய மூடநம்பிக்கைகளையும் புராணங்கள், ஆகமங்கள் மதம் பற்றிச் சாடுகிறார். குளத்து மீனினைநல்ல தன்னீரில் பலதடவை கழுவினால் நாற்றம் போகுமா, இதுபோல் தீர்த்தமாடினால் நமது பாவங்கள் போகுமா உளியால் செதுக்கிய கற்சிலையை கும்பிடுவதால் பலனுண்டோ உணர்ச்சியற்ற மூடர்களே புளிதன்னிரில் செம்பு ஊரினால் அதன் களிம்பு போகுமா அதுபோல் மூடர்களுக்கு என்ன கூறினாலும் அறிவு உண்டாகாது. இது போன்ற பல முடபழக்கங்களை சாட்டுகின்றனர் ஏன்? மருதவன புராணம் என்ற திருவாடுதுறை ஆதினம் வெளியிட்டுள்ள 1924—ம் ஆண்டு புராண நூலில் இருந்து, 146- பக்கம் 42- வது அத்தியாத்தில் கூறப்ப்ட்டுள்ளதை பார்ப்போம்
யுவனாசுவச் சருக்கம் :-
       புகழ்பெற்ற சூரிய குலத்தில் உதித்தவனும் தருமத்திற் சிறந்தவனும் கொடும்  பகைவர்களுக்கு சிம்மம் போன்ற பராக்கிரமம் உடையவனுமான யுவனாசு என்னும் பெயருடைய ஓர் மன்னன அயோதிதியா பட்டினத்தில் அரசு புரிந்து வந்தான் இவனுக்கு எல்லா பாக்கியமும் இருந்தும் புத்திரனில்லாத குறைவினால் மனம் வருந்தி தன் குலகுருவாகிய வசிஷ்டர் முனிவரை அணுகி தனக்கு உள்ள குறையை தெரிவித்தான். அது கேட்ட முனிவர் நீ உன் காதலியுடன் திருவிடை மருதூர் என்னும் தலம் சென்று புத்திர காமேஷ்டி யாகத்தை இயற்றுவாயானால் நீர் வேண்டுகிற மகவினை அடையலாம் என்று திருவாய் மலர்ந்தருளினார். இத்தைக் கேட்ட மன்னன வசிச்ட்ட மாமுனிவரையும் தன்னுடன் வர வேண்டி அழைத்துச் சென்று திருவிடை மருதூரை அடைந்தான். பின் அரசன் வேதாகமங்களில் கூறியபடி தான் விரும்பிய புத்திர காமேஷ்டி யாகத்தை செய்ய ஏற்பாடு செய்து முறைப்படி யாகத்தை இயற்றினான் இதனிடையில் அம மன்னனுக்கு ஒருநாள் இரவு அடக்க மாட்டாத தாகம் மேலிட்டு அருகில் பருகத் தண்ணீர் இல்லாததாலும் அருகில் ஒருவரும் இல்லாததாலும் யாகசாலையில் புத்திர பேற்றின் பொருட்டு தன் மனைவி சாப்பிட வேண்டிய கும்பதீர்த்தத்தை மன்னன எடுத்துப் பருகிவிட்டான். உடன் தாகம் தணிந்தாலும் அவ்மன்னன் வயிற்றில் கருத்தரித்து விட்டது. இதை உணர்ந்த அனைவரும் வருந்தினர். பக்குவமான காலம் வந்தவுடன் அக்குழந்தை வயிற்றைப் பீறிக்கொண்டு வெளியில் வந்தது. மறுபடி மன்னன வயிற்றை தைத்து சொஸ்த்தம் செய்ய பல வைத்திய நிபுனர்கள் முயற்ச்சி செய்தும் முடியவில்லை. இதையறிந்த வசிஷ்ட முனிவர் மன்னன வருத்தத்தைக்  கண்டு சகியாமல் மனம் வருந்தி அரசனை மருதவன பெருமாள் ஆலயத்திற்கு கூட்டிச் சென்று அசுவமேத பிரதச்சனம் செய்தார் உடன் மன்னன புண் காய்ந்து சுகம் அடைந்தான்.
    இது அந்த கோயிலின் சிறப்பு பற்றிய செய்தியாகும். இக் கதை பற்றி சிறிது சிந்தியுங்கள் ஒரு குடத்தில் வைத்து இருந்த நீரை பருகியவுடன் கருத்தரிக்குமா? அதுவும் ஒரு ஆணுக்கு வயிற்றில் கருத்தரிக்குமா? ஆண் பெண் இருவரும் புணர்ந்து அதன் மூலமாக வரும் சுக்கில, சுரோனிதத்தில் வரும் விந்தணுவும், கரு முட்டையும் இணைந்து கருப்பையில் சேர்ந்தால் தான் கருவுண்டாகி வளரும் என்பதுவே உண்மையாக இருக்க இந்த உண்மை கூடத்தெரியாத காலக்கட்டத்திலும் மருத்துவ படிப்பறிவு இல்லாதவர்கள் இது போன்ற கதைகளையும் கடவுளை பற்றியும் அவர் சிறப்பு பற்றியும் தங்கள் மனம் தோன்றியவாறு கற்பனை செய்து  கருத்துக்களை எழுதியுள்ளனர் அன்றைய காலத்தில் படிப்பறிவு அதிகம் இல்லாத பாமரமக்களை இது போன்ற பொய்க்கதைகளைக் கூறி பொருள் ஈட்டினர். இத்தகைய மூடக்கருத்துக்களை கண்டு மனம் வெதும்பிய சித்தர்கள் எதிர்  கூவல் செய்தனர்.
அகஸ்த்தியர் ஞானம ஒன்பது :-
     பாரப்பா நால்வேத நாலும்பாரு
     பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி
     வீரப்பா ஒன்றென்றுக் கொன்றை மாற்றி
     வீனிலேயவர் பிழைக்கச் செய்த மார்க்கம்
     தேரப்பா தெருத் தெருவே புலம்புவார்கள்
     தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்    :- அகத்தியர்
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்தவேன்டம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே  :- அகத்தியர்
என்று நாம் மனத்தாலும் செயலாலும் எந்த உயிர்களுக்கும் தீங்கு            இழைக்காமலும் நல ஒழுக்கத்துடன் நடந்தாலே நம் உயர்வுக்கு வழி வகுக்கும் என்று கூறுகிறார்.
அகத்திய மகா முனி ஞானம் -6
தயங்காமற் பிழைப்பதற்கு இந்தஞானஞ்
சார்வாகப் பாராட்டு ஞானம் வேறே
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி
மாட்டினார் கதை காவிய புரானமென்றும்
இயலான ரசம் தனிலேஈப் புகுந்தார் போலும்
இசைந்திட்டார் சாஸ்திரங்கள் ஆரென்றேதான்
வரையான பயன்பெறவே வியாசர் தானும்
சிவனார்த்தன் உத்திரவு என்றே
உத்திரந்தான் இபாடியே புரானங்க்காட்டி
உலகத்தில் பாரதம் போல் கதையுண்டாக்கி
கர்த்தவைத் தானென்று தோனவொட்டாமல் 
கபட நாடகமாகவு மேலுஞ்சேர்த்து
சித்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம்
சதியுடனே வெகுதர்க்கம் பொருள் போற்பாடி
பத்தாக சைவருக்கு வொப்பினையும் செய்து                 
பாடினார் சாஸ்திரத்தைப் பாடினரே.  
                            :-- அகத்தியர்
பாடினதோர் வகையேது சொல்லக்கேளு
பாரத புராணம் என்ற சேதியப்பா
நீடியதோர் ராவனந்தான் இறக்கவென்றும்
நிலையான தசரதன்கை வெல்லவென்றும்
நீடியதோர் ராசன் என்றும் முனிவரென்றும்
அருள் பெற்றவர்கள் என்றும் தேவரென்றும்            
ஆடியதோர் அரக்கரென்றும் மனிதரென்றும்
பாடினர் நாள் தோறும வகையாய்தானே
                                :-- அகத்தியர்
அழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும்
கட்டிய நால்வேத ஆறுசாச்திரமும்
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன்றுமில்லை
அதர்மமென்றும் தர்மமென்றும் இரண்டுண்டாக்கி
உத்தமனாய்ப் பிறப்பனென்று உலகத்தோர்கள்
தெளிந்திடுவார் குருக்கள் என்றும் சிஷ்யரென்றும்
சீவனத்தக் காகயல்லோ தெளிந்துகானே.   
                               :-- அகத்தியர்










காகபுசுண்டர் ஞானம – 80
பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்
பத்தட ஐம்புலனைப் பத்தினாடே
சிரொருவர் தெரியாமல் மதங்கள்பேசி
திருவான உச்சியிலே சேராமற்றான்                             
ஆரொருவன் ஆதாரம் வெவ்வேறன்று
அடுக்கடுக்காய்ப் பண்ணிரண்டு கலங்கள் என்று
வீரேதான் பேசியே மெலிந்து போவான்
விஷமுண்ட அன்டமதை  விரும்பிக்கானே
                              :- காகபுசுண்டர்
காணப்பா தலமெல்லாம் அண்டவுச்சி
கமலமாடா பதிநெட்டாங் கோடிற் சென்று
பூனப்பா மனதையுந்தான் பிசகொட்டாமற்
பூடட்டா பிரமத்திற் புகுன்தென்னாலும்
வீனப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை
விதியில்லை மதியில்லை கெதியியுமில்லை
தோனப்பா தோணுமடா மனது ஒன்றால்
சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய்வாயே. :- காகபுசுண்டர்
நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும்
நிஷ்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான்
வல்லவர்போல் வேதங்கள் புராண காவியங்கள்
மந்திரங்கள் கோடான கோடி என்றும்
சொல்லுவார் கோவிலென்றும் தீர்த்த மென்றும்
திருடர்கள்தான் அலைந்தலைந்து திடுவார்மட்டை
வெள்வதொரு பிரமநிலை அறியாமற்றான்
வேரருத்தமரம் போலே விழுவார்பாரே. :- காகபுசுண்டர்
பாரப்பா மலர் எடுத்து லிங்கம்வைத்துப்
பார்த்தீப லிங்கத்தைப் பணியாமற்றான்
வீரப்பா  மணியாட்டி பூசை செய்த
வீனர்கள்தான் கத்தபம்போற் கதறுவார்கள்           (கத்தபம்- கழுதை)
தேரப்பா மலரதனைக் கிள்ளும்போது
செத்தபினம் போலாச்சு தெளிந்துபாரு
காரப்பமனங் கொண்டு பரத்திநூடே
கண்டவரே கைலாச தேகந்தானே  :- காகபுசுண்டர்
தானென்ற பிரமத்தை யாரிந்திடாமர்
தரணியில் தெய்வமாடா அனந்த மென்றும்
ஊனென்றம் குருவென்றும் சிஷ்யன் என்றும்
உதயகிரி பாராத உலுத்தமாடு
வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து
வேசையர் மேலாசைவைத்து வீணனகிக்
கோனென்ற குருபாதம் அடையமாட்டான்
கூடுவான் நரகமதில் வீழ்வான்பாரே. :- காகபுசுண்டர்











சட்டைமுனி முன் ஞானம் :-

சமயமெல்லாஞ் சத்தியுண்டு சிவமுண்டு
சண்டாளர் பிரித்தல்லோ தள்ளினார்கள்
சமயமெல்லாம் வேதாந்தந் சித்தாந்தமுண்டு  
சாதகத்தை பாராமற் தயங்கினார்கள்
சமயமெல்லாம் நாதமுண்டு விந்துமுண்டு
பாக்காமற் கெட்டார்கள் உலகத்தோர்கள்
சமயமெல்லாம் அப்பரமாம் ஞானமுண்டு
தாயைவிட்ட பாவத்தால் தாவரப் போச்சே. :- சட்டைமுனி

   இவ்வாறு அகத்தியர், காகபுசுண்டர்,சட்டைமுனி, என்று பலசித்தர்களும் விரிவாகப் பாடியுள்ளார். இதிலும் இவர் பார்பனிய எதிர்ப்பும் மறுபிறப்பு இல்லை என்றும் பிறப்பினால் நல்லவன், கெட்டவன் என்பது இல்லை, சூல்நிலையே இதற்கு காரணம் என்றும் கூறி உள்ளார். இராமாயணம், மகாபாரதம் போன்ற புனைந்துரை கதைகள் என்று சித்தர்கள் சாடுகிறார்கள் பார்ப்பனீயம் எந்தந்த வழிகளில் பாமர மக்களை ஏமாற்றுவதும் கதையளப்பதர்க்கும் நிகற்றவர்கள். இதற்கு ஒருகதையைப் பாருங்கள் 200—ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பதஞ்சலி விஜயம் என்ற நூலில் பதஞ்சலியைப் பற்றி இராமபத்திர தீசிதரால் சொல்லப்பட்டது.
பதஞ்சலி விஜயம் :-
   ஒரு சமயம் பதஞ்சலியானவர்தமது மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். இவரது மாணவர்கள் ஆயிரம் பேராவர். ஆயிரம்பேரிடமும்இவர் ஒருவரே சொல்லித்தர இயலாது என்பதால் தனது ஆயிரம் தலை ஆதிசேசனின் வடிவில் பாடம் சொல்லிக்கொடுத்தார். (இவர் ஆதிசேசனின் அவதாரமாம்) இது ஆயிரம் தலையுடைய பாம்பு வடிவம் என்பதால் அதனுடைய மூச்சுக்காற்றாலும் பார்வையாலும் மாண்டுவிடாது இருக்க மாணவருக்கும் தனக்கும் இடையில் ஒரு திரையிட்டுக் கொண்டார். இது போல் மாணவர்களிடம் பாட நடுவில் சொல்லாமல் வெளியே செல்லக் கூடாது என்றும் யாரும் தம்மை திரையை விலக்கி பார்க்கக் கூடாது என்றும் கட்டளையிட்டு இருந்தார். இருந்தும் ஒரு மாணவர் பாடம் நடக்கையில் யாருக்கும் தெரியாமல் வெளியில் சென்றுவிட்டார். இன் நிலையில் மற்ற மாணவர்களில் ஒருவருக்கு திரைக்கு அப்பால் இருக்கும் ஆசிரியரை பார்க்கும் ஆவலில் திரையை விலக்கிட ஆதிசேச உருவில் இருக்கும் பதஞ்சலி முனிவரின் பார்வையாலும் கொடிய மூச்சு காற்றாலும் அங்கிருந்த அனைத்து மாணவரும் இறந்தனர். அச்சமயம் வெளியே சென்ற மாணவர் வர அவரிடம் தன் வித்தையை கற்பதற்கு நீ ஒருவானாவது இருக்கிறாயே என்று கூறி அவருக்கு கற்றுக் கொடுத்தார். இருந்தும் அவர் சொல்லிக் கொள்ளாமல் வெளிச் சென்ற குற்றத்திற்காக பிரமராட்சதராய் போகும் படி சாபம் கொடுத்தார். இது அந்த நூலில் இராமபத்திர தீட்ச்சிதர் என்ற பார்ப்பனரால்  கூறப்பட்ட கதையாகும். சிறிது சிந்திப் போமாயின் ஒருமனிதர் ஆயிரம் தலையுடைய பாம்பாக வடிவு எடுத்தல் இயலுமா, அப்பாம்பு மாணவர்களிடம் என்ன மொழியில் உரையாடி இருக்கமுடியும் என்று பலவாராக சிந்தித்தால் தான் பார்ப்பனியம் மக்களை எவ்வாறு மூடர்களாக செய்து படிப்பறிவில்லாதவர்கலாகவும், தங்களுக்கு தொண்டு ஊழியம் செய்யவும் வழி வகுத்துள்ளனர் என்பது தெரியும். பதஞ்சலி என்பவரை  திருமூலர் தன் திருமந்திரம் நூலில் நந்தி என்னும் சித்தர் வழியாக வந்த நாதச் சித்தர்கள் எண்மரில் ஒருவராக கூறுகிறார். பதஞ்சலி யோகமார்க்கத்தை பரப்பியவராகும். அவர் தன் வழிவந்த வர்களுக்கு யோகத்தை பரப்பியவராகும். சித்தர்கள் இந்தயோகமுரையை பின்பற்றி வந்தவர்களே
தொகுப்பு முடிவுரை ;--
சித்தர்கள் உருவ வழி பாட்டினை மறுத்தவர்கள் ஆவர்ஆனால் இவரையும் திருமாலின் படுக்கையான ஆதிசேசப் பாம்பு என்று கதையளப்பதில் இருந்து பார்ப்பனியத்தின் செயல்பாடு புரியும் என்று நம்புகிறேன்.ஆனால் இவர்களில் இருந்து திருமூலர் வேறுபட்டு வெளியில் வேதங்களில் கூறிய கடவுளரை உடலில் கொண்டு செல்கிறார் ஒவ்வொரு ஆதாரங்களுக்கு தெய்வநிலை கற்பிக்கிறார்.இது பற்றியும் சித்தர்களின் கடவுள் நிலைக கோட்பாடு அதன்வழி கூறப்படும் ராசமணி, காயகல்ப்பம், முப்பு, பற்றி அடுத்த தொகுதியில் பார்ப்போம். எனது முன் இருதொகுதிகளை போல் இதனையும் வாசகர்கள் படித்து கருத்து தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

நூல் விபரங்கள் :-- ஞானவெட்டியான் ஸ்ரீ மாங்காடு வடிவேல் முதலியார் அவர்களால் எழுதப்பட்டு ,இரத்தின முதலியார் சன்ஸ் !018-பதிப்பிக்கப்பட்டது. பதிநென் சித்தர் பெரிய ஞானக் கோர்வை சென்னை சூளை நிரஞ்சனா விலாச அச்சுக்கூடத்தில் 1926 ல் பதிப்பிக்கப்பட்டது. பதஞ்சலி யோக சூத்திரம் ஸ்ரீ இந்து பப்ளிக்கேசன் விளக்கவுரை –ஸ்வாமி, பதிப்பாளர் – வி க இராமநாதன் (1985)   
                                                                                


No comments: