Thursday 14 November 2013

கற்பம் புறம் -- 6

கற்பம் புறம் --6
                     (கற்பம்-புறம்)
                                   உள்ளடக்கம்

(1)  முன்னுரை (2) கருவூரார் வாத காவியப்பாடல் (3) அகஸ்தியர் கற்பம் உண்ணும் முறை (4)அயக்காந்த செந்தூரம் செய்முறை (5) முதண்ட லேகியம் செய்முறை (6) முடிவுரை    
முன்னுரை :-
மனிதன் வாழ்நாளில் அவன் பார்த்த காட்சிகளில் தன் கண் முன் தன் உறவினர்கள், நண்பர்கள், தாங்கள் அன்பு செலுத்தியவர்கள் பறவைகள் மிருகங்கள் திடீர் என்று ஒருநாள் நோய் விபத்து என்று மரணத்தை சம்பவிக்கிறார்கள். சிலர் வயது முதிற்சியினால் மரணம் அடைகிறார்கள். இதனைப் பார்த்த மனிதன் தன் வாழ் நாளை நீடிக்கவும் நீண்ட காலம் வாழவும் ஆசைப்பட்டான். மற்றும் தன் கண்முன் இளமை மாறியும் வயோதிகத்தன்மை ஏற்படும் முதியவர்களைக் கண்டான். என்றும் இளமையோடும் நீண்டநாள் வாழமுடியாத? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தான். வாழ்வியலில் ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கவும் முற்பட்டான். உணவில் கட்டுப்பாடுகளை செய்து பார்த்தான். சில தாவரங்களை உண்டால் நீண்டகாலம் வாழலாம், இளமையோடு இருக்கலாம் என்று முயன்றான். தங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் சில உலோகப் பொருள்கள் என்று பலவிதப் பொருள்களைக் கொண்டு உடலை திடப்படுத்த முயன்றான்.
         இதற்க்கு கற்பம் என்று பெயரிட்டு கொண்டான் இன்னும் சிலர் வெளிப்பொருள் மட்டும் அல்லாது வேறு ஒன்று இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தனர். ஏன்னெனில் வெளிப் பொருள்காளால் ஆனது வாழ்நாளில் சிலகாலங்கள் நீடிக்க முடிந்தது  அல்லது சில நோய்களை மட்டுமே நீக்க முடிந்தது. இதில் எல்லாம் திருப்தியுறாதவர்கள் சில கேள்விகளை தங்களை நோக்கி கேட்டுக் கொண்டனர் நான் யார்? என்று ஒரு கேள்வி ஒன்றை தன்னை நோக்கி தொடுத்தனர். அதற்கு விடை காண தன்னையே ஆய்வுக் கலமாக ஆட்படுத்திக் கொண்டனர். உள் நோக்கி ஆய்ந்தனர் இந்த உடலை இயக்குவது எது ? அது நிலைப்பட என்னசெய்யவேண்டும் என்று பல விதங்களில் ஆய்வுகளை செய்தனர். ஆய்வுகளின் தங்கள் அனுபவங்களை உலகுக்கு வெளிப்படுத்தினர். இவ்வகையில் சித்தர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இதிலும் புறம், அகம் என்று இரு பிரிவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களின் கூற்றை இதன் மூலம் காணலாம்.
கருவூரார் வாத காவியம் :-
பாரப்பா வெகுகோடி காலமட்டும்
பண்பாகச் சடத்தோடே யிருப்பதற்கு
நேரப்பா கற்பமது கொள்ளவேணும்
நேர்மையுடன் பத்திய மாயிருக்க வேணும்
காரப்பா உப்புகளைக் கட்டவேனும்
கருத்துடனே குருமுடித்துக் கொள்ளவேணும்
சீரப்பா யிவையாவும் முடித்தோன்சித்தன்
செகத்தினிலே நெடுநாளு யிருப்பான்பாரே
                                :- கருவுரார் பாடல்
நாம் கருவூராரின் பாடலில் தொடருவோம். மிக அழகாக கருவூரார் சொல்வதை பாருங்கள் நீண்டகாலம் இந்த உடலோடு இருப்பதற்கு கற்பம் சாப்பிடவேண்டும் உண்மையுடன் பத்தியம் இருக்கவேணும். உப்புகளைக் கட்டவேனும் குரு என்னும் முப்பு முடித்துக் கொள்ளவேணும் இவ்வாறு இருப்பவனே சித்தனாம்.இவனே உலகில் நீண்டநாள் இருப்பானே.என்று சொல்கிறார். கருவூராரின் இப்பாடலில் இருந்து அறியலாம் மனிதன் நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசையே மனிதனை கற்பம் யோகம் போன்ற வழிகளை தோற்றுவித்தது எனலாம் சரி இக்காராணம் மட்டுமே கற்பம் கொள்ள காரானமாயிடுமா மேலும் கருவூரார் சொல்கிறார்.
காசினியில் யான்கொண்ட கற்பம்கேளாய்
கடிதாக நாற்பத்தோர் கற்பமாகும்
நேசமுடன் சித்தியாங் கற்பங் கொண்டதால்
நிலை பெற்றேன் ஆகாசநிலைகள் பெற்றேன்
பாசமற்று நேசமுற்று  பாரில் வாழும்
பண்புதனை விட்டிழந்து பரம்தேடும்
ஆசையுற்றுப் பேரின்ப மாகுஞ்சித்தி
அடைவாகக் கற்பமுறை சித்திபாரே.
                                :- கருவூரார் பாடல்
இப்பாடலின் மூலம் தான் 41, வித கற்பம் கொண்டதாகவும், இவை எல்லாம் ஆகாச நிலை பெற்று பரமனை தேடவும் பேரின்பம் அடையவும் கற்பம் சாப்பிடவேண்டும் என்கிறார். சரி இவர் மட்டும் தான் சொல்கிறாரா மற்ற சித்தர் எவரேனும் சொல்லியுள்ளனரா என்றால் திருமூலர் சொல்வதை பார்ப்போம்.
உடம்பார் அழியில் உயிர்ரர் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே.
                                  :- திருமந்திரம்
ஆகாகா திருமூலர் தான் எவ்வளவு அழகாக கூறுகிறார் பாருங்கள் நம் உடல் அழிந்தால் உயிர்போய்விடும். அவ்வாறு உயிர்போய்விட்டால் உண்மை ஞானம் அடைய முடியாது. இதனால் முதலில் உடலினைப் பேணிப்பாதுகாக்க வேண்டும். அதற்கானதை அறிந்தேன் அறிந்தபின் அதன் வழி நடந்து என்னுயிரையும் பாதுகாத்துக் கொண்டேன். இந்த உடல் தாங்கள் சித்தி அடையும் வரை அவசியம் என்று கருதுகின்றனர். திருமூலரின் கருத்துக் கேட்டிர்கள் இனி நாயனார் திருவள்ளுவர் சொல்லியுள்ளது பார்ப்போம். இவரும் நாதச் சித்தர்களில் ஒருவராவர். இவர் திருமுலருக்குப்பின் நான்கு ஐந்து நுற்றாண்டு பிற்பட்டவராவர். இவர் பஞ்சரத்தினம் – 500 என்னும் நூலில் 17- வது பாடலில் கூறுகிறார்.
“ அரிதரிது கற்பத்திற்குகாதி கரு நெல்லி
துரிதமுடனதனைத் தூசகற்றி இருமுறையாத்
தானுன்டால் ஆறுதளம் தானாகத் தோற்றுவிக்கும்
வானுன்டால் மலையுண்டாமோ.  
                           பஞ்சரத்தினம் – 500
இதில் கற்பத்திற்கு அரிது சிறந்து கருநெல்லி இதை சங்ககாலப் புலவர் ஒளவையாருக்கு அதியமான் என்னும் கடை எழு வள்ளல் களில் ஒருவனான அரசன் இன் நெல்லிக்கனியினை கொடுத்ததாக வரலாற்றில் சொல்லப் படுகிறது. தற்கால விஞ்ஞான முறையிலும் நெல்லிக்கனி அதிக அளவு சிறப்பாக சொல்லப்படுகிறது. அதில் வைட்டமின் “சீ சத்து அதிகம் உள்ளதாகவும் ஒரு ஆரஞ்சுப்பழத்தில் உள்ளதை விட அதிகம் இருப்பதாகவும் உலர்ந்த நிலையிலும் கெடுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும்.இது கருதியே சித்த மருத்துவத்தில் இவ் நெல்லிக்கனியினை முதல் நிலையாக கொண்டு செய்யப்படும் நெல்லிக்காய் லேகியத்துடன் அயச்சத்து, கால்ஷியம் சத்து அடங்கிய பவளபர்ப்பம் அயச்செந்துரம் தரப்படுகிறது. இது போல் ஆயுர்வேத முறையில் சியவனபிராஸ் என்னும் லேகியம் பற்றி எல்லோரும் அறிந்து இருப்பீர்கள். இதிலும் நெல்லிக்கனியே முக்கியமானதாக கொண்டு செய்யப்படுகிறது. மற்றும் இதனை சியவனமுனிவரின் வயோதிகத் தன்மை நீக்கி இளமையை உண்டாக்க அஸ்வினி தேவர்கள் செய்துகொடுத்தனர் என்று சாரங்கதார சம்கிதையில் சொல்லப்பட்டுள்ளது இதனால் இவ்லேகியத்திற்கு சியவ்னபிராஸ் என்று சியவனமுனிவரின் பெயரில் வழங்கிவருவதாக கூறப்பட்டு உள்ளது. எனவே நெல்லிக்கனியானது கற்பத்திற்கு உரிய இடம் பெறுவதில் தவறில்லை.
    மூலிகைகளில் இயற்கையான ஊட்டச்சத்துகளும், அமினோ அமிலங்களும் மினரல்கள் உள்ளதால் இவ்வித சிறந்த தாவரங்களை சாப்பிட்டால் உடல்நோய், உள்ளநோய் இவற்றை நீக்கும் மருந்துகள் என்றும் நோய்வராமல் காப்பதற்கும், ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்துகள் என்று சிந்தித்து அதன் முலம் அவர்களின் அனுபவங்களை தங்களின் நூல்கள் வாயிலாக பதிவு செய்து உள்ளனர். இனிக் கற்பம் பற்றி பாம்பாட்டி சித்தர் சொல்வதை பார்ப்போம்.
“ காலமென்னும் கொடிதான கடும்பகையை
கற்பம்என்னும் வாளினால்  கடிந்துவிட்டோம்
சாலப் பிறபிறப்பினை நாம் கடந்தோம்
தற்பரங் கொண்டோ மென்றாடாய் பாம்பே “
                                 :- பாம்பாட்டிச் சித்தர் பாடல்
இவர் காலத்தை கொடியதாகவும் பகையாகவும் கருதுகிறார். மரணத்தையும், மாறிப் பிறக்கும் தன்மையும் தாங்கள் கற்பத்தினை உண்டு விடுபட்டு பரம்பொருள் கண்டோம் என்று கூறுகிறார். மனிதன் நீண்டநாள் வாழவேண்டும் அதுவும் இவ்வுடலுடன் திடகாத்திரமாய் இருக்கவேணும் என்பது அவனது ஆசை. மற்றும் சிலசித்தர்கள் தாங்கள் உண்ட அல்லது அறிந்த கற்பம் பற்றி சில மூலிகைகள் பற்றி சொல்லியுள்ளனர் இதில் கருவூரார் சொல்லும் கற்பம் பற்றி பார்ப்போம்.
“ பொன்னாங்கானித்தகரை யாரைக் கற்பம் புருடர்வயதாயிரமாம்
சொன்னமதிமயமாம் சிரியாநங்கை சோதிவிருட்சமப்பா
காணப்பிலாத்த்யிலம் பேய்ச்சுரை கடுக்காய்ச்சுக்கிஞ்சியதாம்
தேனதுமாங்கனியில் தயிலமும் தேவதாளிமரமும்
சாதியின் கெந்தகமும்சூதமும் சரியான நாகமுடன்
ஆதியரிதாளம்செந்தூரம் ஆக்கியுன்டால் கோடியுகம்
கொங்கு விஷ்ணு பூபதியும் நாகமல்லி குமரிய்ம்மான் சீந்தியுடன்
வேங்கைரோம விருச்சம் நல்ல வியப்பான சோதிப்புல்லும்
சாய விருசமத்தில் தேவரம்பை தானேயுலவுவார்கள்
மாயாதி விந்தையப்பா கருநெல்லி வளரும் வெள்ளை சாரனையும்
நாறுகரந்தையாவாரையும் வெள்ளை நாவற்சுனங்குமரம்
பேர்பெருந் தில்லையாப்பா நல்ல பிரியமொடுசென்பகப்பூ
எருமை கனைச்சான்விருச்சம் செங்கொடுப்பைஇலை தும்பிபேய்பீர்க்கு
ஒருமாமர விதையாச் சேர்த்து உயர்ந்த தயிலம்இறக்கி
செங்கொடி வேலியுடன்அவுரி சிறந்த உகாமரமும்
பொங்குஞ்சதுரகிரி தன்னிற்பொருந்தியே தானிருக்கும்
ஆதி முதல் சொன்னதிவை சடம்அழியாதமூலியிது
நீதியுடன்போயறிந்து இதைநேயமுடன் கொண்டுவந்து
காந்தமொடு கெந்தகத்தைப் பற்பம் கணக்காகவே முடித்து
சந்தமுடனதையுஞ் சேர்த்துச் சாப்பிடச் சித்தியாம்
காக்கை கரிச்சானுஞ்செந்தலைக் கருடன் கழுகத்தின்
நாக்குதனை தேனிர் கொள்ள தேகம் வச்சிரகாயமதாம்
விண்டுனான் சொல்லிவிட்டேன் இதனை மீதினில் சொல்லாதே
சந்தானம் தான்றிமரம் வெட்புளா சரணை வில்வமரம்
விந்தை பேயன் வாழைப்பழம் மேன்மையாய் கொள்வோம்நாம்
கஞ்சாகையான்மேனி நீர்மேல் நெருப்புக் கண்டங்கத்திரி வள்ளியோடு
தஞ்சமென கொட்டிக் கிழங்கு இதைதப்பாமலே எடுத்து
எட்டிமர வேர்த்தயிலம் அதையின்பமுடனேஇறக்கி
குட்டித் தக்காளியிலை சீந்தி கோடகசலையுடன்
கூத்தன்குதம்பையுடன் மேற்சொல் குருவான பர்ப்பமுடன்
நேர்த்தியுடனழிஞ்சித்தயிலம் நேர்மையுடனே சேர்த்து
இன்னமுங்க்கேளுகற்பவகை இயல்பாகவேதானும்
சொன்னதொரு மாமரத்தின் புல்லுருவி தோற்றமுடன்நெடுத்து
அத்திமரம் வாகை புளியாரை நிலவாகையுடன்
சித்தி கற்றாமரையும் நல்ல செய்குளம்புச் செடியும்
மலைமாமரவேரும் பட்டை வகையாகவே எடுத்து
அலையாதே கற்பமிது பற்பம் அருமையுடன் சேர்த்து
சித்திரமூலமுடன் சூடன்சிவனாருடவேம்பு
சித்தகத்தி தன்னுடனே பிரமிசெங்கற்றாழைதானும்
அலரிசாகா மூலிமல்லி இன்னும் அவுரியுடன் வல்லாரை
விலாமிச்சை தன்னுடனே கூகைநீர் வெளிச்சி மரத்தோடும்
முப்பிரண்டை கள்ளி வீழிநல்ல மூலம் புலியுடனே
செப்பமுடனேதுளசி மூலம்வேம்பு சேருங் கருடக்கொடியும்
சிவனாரின் வேம்புடனே வெள்ளருகுசின்னி நாகதாளியுந்தான்
தவத்தோர்க்குதவியுள்ள ஊமத்தை சதுரக்கள்ளியுடனே
இருக்கில்லை தன்னுடனே கடுக்காய்பூ இயல்பானமுள்ளிலவு
கருடனுட கிழங்கும் நாயுருவி கருவூமத்தைதானும்
திருகுகள்ளியுடனே கட்டுக்கொடி செந்நாயுருவியுடன்
பெருஉதிரவேங்கை வெடியுப்பு பேராம் செங்கோவையுடன்
சூரத்து நிலவாகை மிளகு சிறந்த ஆவரையும் 
பாலுள்ளசேங்கொட்டைவால்மிளகு பங்கம்பாளையுடனே
சித்தமுள்ள வெள்ளருக்குகோவை சென்நாயுருவியுந்தான்
தாக்கமுள்ள காஞ்சிரையும்வென்மிளகுதக்காளி தன்னுடனே
சேம்புச்செடியோடு கொடிக்கள்ளி சிவகரந்தை தன்னுடனே
வேம்பின் மேற்புல்லுருவி மிக்க வேலாமேற்புல்லுருவி
வாகை மேற்புல்லுருவி தேக்கு மாஉசில்மேற்புல்லுருவி
தாக்கமுடனாலின் மேற் மிகத்தான்படர்ந்த புல்லுருவி
நூத்திஎட்டு கற்பமது அறிந்து நுனுக்கமுடனேதான்
நேர்த்தியுடனேகொண்டாள் சடல நிலைத்துவிடும் தப்பாது
இந்த நல்ல கற்பமதிற்கொஞ்சம் இனிமையாய் கொள்ளாமல்
சந்ததமும் பெண் வலையில்சிக்கி தானலைந்துஅறிவுகெட்ட
நன்னயமாய் வாதிகளும் மிக ரசவாதமது செய்வேன் என்று
சொன்ன மொழி கேளாத மடித் துன்மார்க்க உலுத்தர்தான்.          
குறிப்பு :- மேற்கண்ட மருந்துகளை அல்லது மூலிகைகளை நன்கு அறிந்தவர்களிடம் கேட்டு முறைப்படி ஒழுக்க நெறிகளை (நியம, இயமங் களுடன்) தெரிந்து சாப்பிடவும். இனி அகத்தியர் பூரணசூத்திரம் பக்கம் 22- பாடல்-47 லில் இருந்து சில கற்ப முறை பார்ப்போம்.
அகஸ்த்திய்ர் கற்பம் உண்ணும் முறை :- 
முறையாகக் கற்பத்தை சொல்லக்கேளு
மூதண்டலேகியமும் அயக்காந்தந்தான்
துறையாக அறுசுவையும் கழற்று முன்போ
துரிதமாய் கொண்டுவிடு மண்டலந்தான்
நிறையாக வல்லாரை வருஷ மொன்று
நேயமாய் கொண்டபின்பு கடுக்காய் கொள்ளு
அறையமலதின் பிறகுகொங்கணர் சொல்முறையைக்கொள்ளே
வல்லாரை விபரம் :-
கொள்ளுதற்கு வல்லாரை முறையைக்கேளு
குழிவெட்டிக் கருப்பேற்றிப் பயிரேசெய்து
விள்ளுகிறேனிதை எடுத்துக் கழுவியே
காடிவார்த்து வன்மை பெறக்நிழலில்போடு
உள்ளுறவேயுலர்ந்தபின்பு இடித்துச் தான்
உத்தமனே புதுக்கலசந்தனில் வைத்து
தெள்ளறவேகாடியிலே தின்னவேனுஞ்
செப்புகிறேன் காடிவைக்கச் செய்கைஎன்னே
காடிவைப்பு விபரம் :-
என்னவே கருங்குருவை நெல்லைகுத்தி
இயலான புதுப் பானைதன்னிற் சமைத்து
வன்மையாச் சுத்த சாலமதனில் வார்த்து
வைத்திடுவாய் மண்டலந்தான் வேடுகட்டி
சொன்னதொரு வெய்யிலிலே தினமும் வைத்துச்
உறுதியாய் மறுபானை பகுந்து மூடி
முன்னுள்ள பாண்டத்தைஅனலிற்காச்சி
முறையாகவதிலிட்டு சுத்தசலம் வாரே
காடியின் பெருமை :-
செலம் வார்த்துப் பின்னுமத்தை ரவியில் வைத்துச்
செய்திடுவாய் மண்டலத்துக்கு கொரு சோறாக
நலமாக வெவ்வேறே பகுத்து காச்சி
நாட்டியே வெய்யிலில் வைத்து ஆறுமாதம்
பெலமான காடியிது வல்லாரைக்குப்
பேசாதே யிக்கருவை பெரியோர் சொல்வார்
அலையாமல் வல்லாரைச் சூரணத்தை
யழகான புன்னைக் கையளவு கொள்ளே
கொள்ளடா சமாதியிலே இருக்கும் போது
கூறாகப் பூசித்து தீட்சை யோதி
விள்ளடா வெய்யுலுடனே காற்றுமாகா
மேனியது வுலவாக கிலேசமாகா
தள்ளடா எண்ணைய் சுண்ணம் கடுகு வுள்ளி
தாரணியில் மீன் இறைச்சியாக நீக்கே
அடக்கம் :-       
நீக்குவது புளியோடுஇலையுப்பும்
நிலையான உறக்கமொடு கோபமாகா
ஆக்குவது சுனையாகா பொய்யுமாகா
அப்பனே மனமொன்றாய் புத்தியொன்றாய்க்
தாக்கவரும் மாய்கை எல்லால் அடித்துத்தள்ளு
சதா நித்தம் பூரணத்தில்அகலாமல் நில்லு
போக்குவது பழகதையே நீபோக்கினால்
புகழான சிவயோகப் புனிதமாமே
கற்பத்திற்கு பத்திய உணவு :-
செனியாமல் கற்பங்கள் கொள்ளும்போது
திரிகடுகு திரிபலையுஞ் சீரகம் ஓமம்  
கணியான சாதிக்காய் கிராம்பு பத்திரி
கருவேப்பிளையோடு ஆவின்நெய்பால்
தனியான சருக்கரை தேன்வரகு குருவையரிசி
சதுரான தூதுவளை புளியாரை யோடு
தனியான சிறுகீரை சிறுபயருமாகும்
கட்டியதோருப்பாகும் கொறுக்கையாமே
கடுக்காய் கற்பம் :-
ஆகுமே கற்பூரச்சிலையின் சுண்ணம்
அண்டமொடு கல்நாருந்தங்கச் சுண்ணம்
வாகுடனேயான் சொன்னேன் மற்றொன்றுமாகா
வகையாக இந்தமுறை கற்பங்கொள்ளு
மோகமாய்க் கடுக்காயின் முறையைக் கேளு
முயல்வாகச் செங்கடுக்காய் பொற்க்கடுக்காய்வாங்கி
பாகமாயிடித்தனைச் சூரனித்துப்
பாச்சுதற்கு சிற்றண்டஎண்ணைய் வாங்கே
எண்ணெயிதுவழக்கடபொடிதானாழி
இயல்பாக விட்டதனை மைபோல்கிண்டி
கனமான புன்னைக்காயளவு  கொள்ளு
விண்ணகளைநித்த நித்தங் கண்ணோட்டம்பார்
வெளி நிற்குஞ்சுழு னையிலேவாசியேறுங்
கண்ணதனை முறுக்கி யேறப்பார்
கபாலத்தில் அமுர்தமது கனிந்துபாயும்
கபம் அகற்ற :-
பாயுமே சுழினைதனைத் திறப்பதற்குப்
பகருகிறேன் கற்பமொன்று பரிவாய்த்தானே
காயுமே கரிசாலைச் சாறுனாழி
கருதியதோர் நெய்னாழி கலந்துகாச்சி
வாயுமே மெழுகு பதந்தன்னிலேதான்
வடித்து வைத்துக் கைப்பெருவிரலிற்தடவிப்
பாயுமே யுன்னாக்கிற்புரள வைத்துப்
பழகவே கபமெல்லாம் அற்றுப்போமே
குறிப்பு :- இப்பாடல் கருத்து இதற்கு பின் எழுதும்  அக கற்பமுறையில் கருவூரார் சொல்வதையும் பார்க்கலாம்.
அற்றுவிடும் இரண்டு விரல் வாயிலோட்டி
யனலான கபமெல்லாம்வாங்கு வாங்கு
மற்றுமினிமூலத்தின் சுத்திகேளு
வாகான குமரிச்சார்  சிற்றண்டத்தெண்னை
யுற்றதனை முன்போலே காச்சிக்கொண்டு
வுரவாகநடுவிரலில் தோய்த்துக் கொண்டு
சுற்றிவிடுமூலத்தின் மூலமெல்லாம்
சுகமாக கீழ்நோக்கும் சுத்தியாமே
மிளகு கற்பம் :-
சுத்தியிருநேரம் நாட்டம்பாரு
சுழிதிறக்கும் பூரணத்தில் சொக்கிப்போம்
புத்தியாக அமுர்தங் கண்திறந்து பாயும்
பாவிகட்கும் இக்கருவைப் பகரலாமோ
வெற்றியாம்மிளகினுட கற்பங்கொள்ள
விபரமதைச் சொல்லுகிறேன் விரித்து நன்றாய்ச்
சித்தியாங் நல்மிளகு காய் தெரிந்தெடுத்துச் 
சிறப்பான வமுரிதனைதேத்தாம் வித்தால்
வித்தாலே அமுரிதனை தெளியவைத்து
விதமாக மிளகதனைஐந்தைந்தாய் தினமும்
முத்தான அமுரியுடன் கொள்ளும்போது
முக்கியம்ட நூறுக்கும்மதிகம் வேண்டாம்
கொத்தான உஷ்ணந்தான்மிஞ்சிற்றானால்
சித்தான அறுக்கின் வேர்பிடிதான்ஒன்று
சொல்கிறேன் மிளகதுதானிருபத்தைந்தே
அஞ்சாமற்உடல்காய்ந்து காணுமே யானால்
அப்பனே பசு வெண்ணெய் பாக்களவு போட்டு
மிஞ்சாமற்கொண்டிடவே வெப்புத்தீரும்
விருமானகிய ழமிது மெத்தகனன்று
நஞ்சுண்ட சிவனன்று கற்பங்கொண்டு
நாதனார் சடைமிது தரித்த கற்பம்
பக்ன்சகனபதி மூலத்திருந்துப்பா
பார்த்தாக்கலிதன் பெருமை பகரொன்ணாதே
மறுகற்பம் :-
ஒன்றான அயக்காந்தங் கொண்டபின்பு
உத்தமனே அருசுவையுங் கழற்றிப் போடு
கன்றானவல்லாரை கடுக்காய்யோடு
கனமான மிளகோடு மறுகற்பங்கொள்
நன்றன சட்டைமுனி சொன்னமார்க்கம்
நலமாகக் கொண்டு விடக் காயசித்தி
வின்டான கெவுனசித்தி யோகசித்தி
வேண்டியதோர் அட்டமாசித்திபாரே
கற்பம் உண்ணும் முன் பக்குவம் :-
ஆமென்ற மூலியெல்லாம் கருப்பேற்றிக்கொள்
அப்பனே உன்திரேகம்பெலத்துப் போச்சு
ஓமென்ற கற்பங்களுண்ணும்போது
உடலிலே நோய்கள் வந்தால் முன்நூற்றுள்ளே
தாமென்ற செந்தூரம் லேகியங்கள்
தப்பாமற்செய்து வைத்துப் பின்னே கற்பம்
நானென்று நோய்கள் வந்தால் செந்தூரத்தை
நாட்டிடவே நோய்தீரும்நளினமாமே
கற்பம் உண்ணும் காலம் :-
நளினமய்க் கற்பங்கள் கொள்வதற்கு
நலமான காலத்தைக் சொல்லக்கேளு
தெளிவான கார்த்திகையும் மார்கழியுமாகா
திறமான அருசுவையுங் கழற்றிப்போடு
சுளுவான வல்லாரை தொடுத்துக்கொள்ளு
சுகமான கடுக்காய் தான் ஆனிமாதம்
அழியாமல் ஆவணியிலேமிளகுகொள்ளு
அப்பனே யுதையத்திற் சரிரசுத்தி
யொளியாமல்கட்டளையை முடித்துக் கொண்டு
உதையாதி மூன்றுகுங்கற்பம் தின்னே
பத்திய முண்ணும்காலம் :-
கற்பந்தான் தின்பதற்கு மூன்றேமுககால்
கடந்தபின்பு பத்தியங் கொள்ளு கனலேறாது
உற்பனமாங் கற்பத்தைச் சூரியனிற்கொள்ளு
உண்பதுவுமும் உறங்குவது மொன்றேமார்க்கம்
நட்புடனே பூசை செய்வார் காலமூன்றும்
நாளொன்றுக் கிருநேரம்நாட்டம்பாரு
சொற்ப மென்றபெண்ணாசை விட்டாலும்ந்தான்
சுகமான சயனத்தில் பெண்தான்வந்தே
சயன மாய்கை –வாசிகுறி :-
வந்து தான் மருவிடவேவிந்துவிழ
மகத்தான தபம் எல்லாமழிந்துபோகுங்
நொந்துதானழியாமல் நினைவாய் தூங்கு
குறியான புருவமைய்ங் குறியைப்பாரு
வெந்துதான்போகுமடா மூலத்தீதான்
மேற்கொண்டால் மாயைஎல்லாம் வெளியுமாகும்
உந்திதான் பசியாமலிருக்கவென்றோ
உறைப்பானவாசிகொண்டு அமுர்தமுன்னே
கற்பம் உண்ண அறிவு :-
உண்ணுவது சாதகமாய்த் தள்ளவேனும்
முற்ற அருசுவையதனை நீக்கவேனும்
பண்ணுவது சிவயோகம்பண்ணுவேனும்
பார்வதியுடன் சிவனுடைய தீட்சைவேனும்
எண்ணுவது இதுகளெல்லாம் மிகவேனும்
இறவாமலிருக்கவென்றால் கற்பம் வேணும் 
உண்ணுவது கற்பமுண்ணபாத்திரங்கள்
காந்தத்தினருமை தனைக்காட்டுகிறேன்
காந்த பாத்திரம் :-
காட்டுகிறேன் காந்தமது முநூற்றுள்ளே
கலந்துரைத்தபடியுருக்கிக் கருவில் வாரு
முட்டுகிறேன் கிண்ணியைப்போல்வார்த்து கொண்டு
முனையான கிண்ணியிலே பலைவார்த்தால்
ஆட்டுகிறேன் பொங்கியது மேலே நிற்கும்
அப்பனே காந்தத்தினதிசயம் பாரு
நாட்டுகிறேன் தயிர்போலாமந்த பாலை
நலமாகக் கொண்டிட நோய் நாடாதென்னே
நாடாத கிண்ணியிலே கற்பமுன்னு
தேடாதேநெய் தேனுமுண்ணலாகும்
தினந்தோருங் கொண்டாக்கால் சித்தியாகும்
ஓடாது விந்துவது கீழ்நோக்காது
உறக்கந்தான்னாலுங்கட்டிப்போகும்
கூடாத சித்திஎல்லாம் கூடும்கூடும்
                    :- அகத்தியர் பூரண சூத்திரம் – 205
இதுவரை அகத்தியரின் பூரணசூத்திரம் என்னும் நூலின் பாடலை பார்த்திர்கள் இதில் கற்பம் உண்பதற்கு முறைகள் சொல்கிறார். முதலில் மூதண்டலேகியம் (அருகம்புல் லேகியம்) செய்து அதில் அயக்காந்த செந்தூரம் செய்து இரண்டும் கலந்து முறையாக ஒரு மண்டலம் சாப்பிடக் கூறுகிறார். பின் வல்லாரை ஒரு வருஷம் சாப்பிடக் சொல்கிறார். அதன்பின் கடுக்காய் சாப்பிடக் கூ றுகிறார். இதன் பிறகு அரைக்காமல் மிளகு சாப்பிடச் சொல்லுகிறார். இனியிதில் சொல்லப்பட்டுள்ள அயக்காந்த செந்தூரம் செய்யும் முறையை நாம் அகத்தியர் செந்தூரம் முன்நூரில் இருந்து பார்ப்போம். 
அயக்காந்த செந்தூரம் :-
பாரப்பா அரைப்பொடிதான் பலந்தான் ஒன்று
பரிவான காந்தமது பலந்தான் ஓன்று
சேரப்பா கெந்தகந்தான் பலந்தான் ஒன்று
திரமான பூநீறு கழஞ்சி யொன்று
காரப்பா பழச்சாற்றா லிரண்டு சாமங்
கடுகவே யரைத்துவெய்யிற் காயப்போட்டு
ஆரப்பா மறுநாளும் ரெண்டு சாமம்
மட்ங்கவே யரைத்துவில்லைக் காய்ந்தபின்பே

பின்பதனைக் சுடுசெங்கள் குகைக்குள் வைத்துப்
பேசாமல் மேலுந்தான் மூடிக்கொண்டு
பின்பதனைச் சீலைமண்தான் ரெண்டுசெய்து
விதமாக முட்டளவு குளிதான்வெட்டி
ஐம்பதெறுக் குள்ளேதான் புடத்தைப்போடு
ஆறியபின் நெடுக்கச் செந்துரமாகும்
துன்பமது கற்பத்தாற் சூடுகொண்ட
தோலோடு அஸ்திமுதற் கனப்பும்பாரே

கனத்திருந்த நீர்தோசம் கபலவாய்வு
கண்புகைச்சல் காதுமந்தங் கானாதோடும்
அய அரப்பொடி பலம் ஒன்று, காந்தம் பலம் ஒன்று, கெந்தகம் பலம் ஒன்று எடுத்து குழிக்கல் அம்மியில் போட்டு அரைத்து அதில் பூநீறு ஒரு கழஞ்சி சேர்த்து பின்பு எலுமிச்சம்பழசாரதனால் மூன்றுமணிநேரம் அரைத்து வெய்யிலில் வைத்து காய்ந்தபின் மீண்டும் அம்மியில் போட்டு எலுமிச்சம்பழ சாறில் அரைத்து வில்லைதட்டி காயவைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு சுட்ட செங்கலை எடுத்து அவ்வில்லை கொள்ளும் அளவு குழி செய்து அதனுள் வைத்து மேல் ஒரு செங்கல் வைத்து சீலைமண் செய்து காய்ந்தபின் ஒன்றரை அடி நீளம், அகலம, ஆழாம் உள்ள குழி தோண்டி பாதி அளவு இருபத்தயைந்து எரு அடுக்கி அதில் செங்கல் சீலை செய்ததை வைத்து பின் மீண்டு இருபத்தயைந்து எருவடுக்கி புடமிடவும். ஆறியபின் எடுத்து அரைத்து எடுத்து வைத்துக் கொண்டு.கீழ்கண்ட லேகியத்தில் சாப்பிடவும் (அளவு குன்றி)
முதண்ட லேகியம் :-
கண்டுகொள்ளு ஆவின்பால் படிதான் ஒன்று
முதனடம் நன்னாரி விலாமிச்சம்வேர்
விண்டு கொள்ளுங் கீழ்காய் நெல்லி வேரும்
விளங்கியதோர் வகையொன்று பலந்தனொன்று
உண்டுகொள்ளும் படிஎட்டுச் சலத்தினுள்ளே
உத்தமனே போட்டுலர்த்திப் படிதானொன்று
மண்டுபடாப் பாலுடனே கூடவாரு
மைந்தனே கமுகம் பூச்சாறுவாறே
வாரப்பா படியொன்று பழச்சாறுங்கே
வரிசையாய்ப் படியொன்று கரியான்சாறு
சேரப்பா படியொன்று கீழ்காய்நெல்லித்
தெளிவாகத் தாழைச்சாறு படிதானொன்று
சாரப்பா ரெண்டு பத்துப் பலன்தான் வெல்லம்
தான்கரைத்து எரியிடவே பாகுசேரில்
ஏரப்பா திரிபலையுஞ் சீரகத்தினோடு
இயல்பான திரிகடுகு ஏலந்தானே
ஏலமில வங்கத்தோ லிலை கிராம்பு
எவச்சாரம் சாதிக்காய் நறுக்கு மூலம்
வால்மிளகு வாய்விளங்கம் கோட்டமப்பா
வகையொன்று பலமொன்று சூரணித்து
ஆலைவாய் சங்குப்பொடி யதிலேபாதி
யப்பனே பாகுவரும் போதிர்போடு
சாலவே ஆவின்நெய் படிதான் வாரு
தவறாமல் தேனதிலே பாதிவாரே.
வார்த்திடவே மெழுகுபத மானவாறில்
மக்களே பீங்கானில் பதனம் பண்ணு 
கோத்திட்டு லோக செந்தூரத்தில் திண்ணு
குன்றியிடை தினமொன்றுக் கிருநேரந்தான்
சாத்திடவே  லேகியந்தான் கழஞ்சிரெண்டு
சாதித்து மண்டலமே திண்பாயாகில்
ஏத்திட்டு எந்தவகைப் பாண்டானாலும்
இலேகியசெந்தூரத்தைக் கண்டபோதே.
கண்டவுடன் பாண்டங்கே பறந்ததப்பா
காயங்கள் வெளுத்திரிந்த தெங்கேபோச்சு
கொண்டவுடன் புளியோடு புகையிலையுமாகா
கொடுமையுள பெண்ணாகா துளுந்துமாகா
பண்டுடைய பத்தியத்தை விட்டானால்
படுபாவி லேகிய செந்தூரந்தானே
சண்டமாருதம் போல மெய்யழித்துச்
சன்னுமாடா மாற்றுமருந் தில்லைதானே.
பசும்பால் ஒரு படி,மூதன்டம்,நன்னாரி, விளமிச்சம், கீழ்காய்நெல்லி இவைகளின் வேர்கள் வகை ஒன்றுக்கு பலந்தான் ஒன்று கொண்டுவந்து எட்டுபடி நீர் விட்டு ஒருபடியாக சுண்டவைத்துக் கொள்ளவும். இதனுடன் கமுகம் பூச்சார், எலுமிச்சம் பழச்சார், கரிசாலைச்சார், கீழ்காய் நெல்லிசார், தாழைச்சார் வகைக்கு படிதான் ஒன்று எடுத்துக் கலந்து அதில் மேற்கண்ட கசாயம் விட்டு பத்து பலம் வெல்லம் கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சி பாகு பதத்தில் திரிபலை,சீரகம், திரிகடுகு, ஏலம, இலவங்கப்பத்திரி, கிராம்பு, எவச்சாராம், வாய்விளங்கம், கோட்டம், சாதிக்காய், நறுக்குமுலம், வகை ஒன்றுக்கு பலம் ஒன்று பொடித்து சலித்து எடுத்துக் கொல்ளவும். இதன் நிறையில் பாதியளவு சங்கு ( இதை எருவில் வைத்து சுட்டு வெளுத்த நிலையில் எடுத்து சூரனித்துக் ) பொடி கலந்து பாகு பதத்தில் இறக்கி வைத்து மேற்கண்ட பொதிகளைச் சேர்க்கவும் நன்றாக கிண்டி அதில் பசுவி நெய் படி ஒன்று சேர்த்து, பின்பு அதில் தேன் அரைப்படி விட்டு கிளறி எடுத்துக் கொள்ளவும். இதில் அயக்கந்த செந்தூரம் வைத்து பிரட்டிச் சாப்பிடவும்.புளி,புகையிலை பென்போகம் நீக்கவும் சோகை, காமாலை நீங்கி இரத்தவிருத்தி உண்டாகும். இந்த விபரங்கள் போதுமானதாகும்.
முடிவுரை:-
     இதில் நான் சொல்லியுள்ள வைகளையும் அடுத்து அகப்பகுதியில் கூறப்படுவதையும் நன்றாக சிந்தித்து பின் உங்கள் மனதிற்கு எது தேவை என்றும் சரி என்றும் படுவதை செயல் படுத்துங்கள் இது போல் அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களையும் கேட்டு நீங்கள் முடிவுகளை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.இன்னும் சித்தர்களின் சித்தாந்த முடிவுகளை எல்லாம் நாம் சித்தர்களின் கடவுள் நிலை என்ற பகுதியில் பார்ப்போம். முன் கருவூராரின் பாடல் கருத்துக்களும், அகத்தியரின் பாடல் கருத்துக்களும் தெளிவாக உள்ளதாலும் மற்றும் அதில் குறிப்பிடும் படியான உள்கருத்துக்கள் இல்லாததாலும் பாடலைப் படித்து தெரிந்து கொள்ளாலாம்.                                                
         
     
     
   








              

No comments: